Friday, January 17, 2025

Latest Posts

மஹிந்தவை போன்று எம்மை உலக நாடுகள் விலைக்கு வாங்க முடியாது – அநுரகுமார திசாநாயக்க

மஹிந்த ராஜபக்ஷவை விலைக்கு வாங்கியதை போன்று உலக நாடுகளால் எங்களை விலைக்கு வாங்க முடியாது.இந்திய விஜயத்தின் போது பல விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டன. நாட்டின் தேசிய வளங்களைத் தாரைவார்க்க ஒத்துழைப்பு வழங்குவதாக நாங்கள் குறிப்பிடவில்லை. காலவோட்டத்துக்கு பின்னர் உலகமும், அரசியலும் மாற்றமடைந்துள்ளது, ஆகவே நாங்களும் மாற்றமடைந்துள்ளோம் என்று இந்திய வெளியுறவு அமைச்சரிடம் குறிப்பிட்டோம் எனத் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடு என்ற ரீதியில் தனித்துச் செயற்பட முடியாது,சகல தரப்பினரின் ஒத்துழைப்புடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.நாட்டுக்கும்,நாட்டு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நாட்டுக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான வெளிவிவகார கொள்கையில் இருந்துக் கொண்டு நாங்கள் செயற்படுவோம் எனவும் குறிப்பிட்டார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்புக்கு அமைய இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன். இந்திய விஜயம் குறித்து சஜித் பிரேமதாச, மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரசிங்க ஆகியோரின் தரப்பினர் கலக்கமடைந்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள். அக்குற்றச்சாட்டுக்களைக் கண்டு நாங்கள் கலக்கமடையவில்லை.

தற்போது எதிரணி எமக்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் ஒன்றிணைவார்கள்.முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தேர்தல் காலத்தில் ஒன்றாக மேடையேறுவார்கள். அதே போல் மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் 2019 ஆம் ஆண்டு போல் கூட்டணியமைப்பார்கள்.ரணிலுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் தனிப்பட்ட முரண்பாடுகள் காணப்படுவதால் அவர்கள் ஒன்றிணைவது நிச்சயமற்றதாக உள்ளது.ஒருவேளை ஒன்றிணையலாம்.

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, மஹிந்த ராஜபக்ஷ,மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அனைவரும் நண்பர்கள்.தேர்தல் காலத்தில் மாத்திரம் கொள்கை ரீதியில் வேறுபாடுகள் உள்ளதாக மக்கள் மத்தியில் காட்டிக் கொள்வார்கள்.தேர்தல் முடிந்த பிறகு வெற்றி பெறும் நபருடன் இணக்கமாகச் செயற்படுவார்கள்.காலம் காலமாக இந்த போலி மாற்றமே இடம்பெறுகிறது.இம்முறை இது மாற்றமடைய வேண்டும்.

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தீர்மானமிக்கது. எமது கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு எம்மிடம் ஊடக செல்வாக்கு கிடையாது, ஒருசில ஊடகங்கள் அரசியல்வாதிகள் வசமுள்ளதால் எமக்கு முறையான அங்கீகாரம் கிடைப்பதில்லை. துரதிஸ்டவசமாக நாங்கள் இந்த தேர்தலில் தோல்வியடைந்தால் சோர்வடைய போவதில்லை. நாட்டுக்கு தீங்கு ஏற்படுத்திய இந்த முறையற்ற அரசியல் கலாச்சாரத்தை முழுமையாக இல்லாதொழிக்க தொடர்ந்து முயற்சிப்போம்.

ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் முதலில் சிறந்த அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம். சட்டவாட்சி கோட்பாட்டின் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகளைச் சட்டத்தின் முன் கொண்டு வந்து தண்டனை வழங்குவோம்.அரசியல்வாதிகள் பொதுச் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற நிலைமையை மாற்றியமைப்போம்.மூடி மறைக்கப்பட்டுள்ள பிணைமுறி மோசடி உள்ளிட்ட பல ஊழல் மோசடிகளை முறையாக விசாரணை செய்து உரியத் தரப்பினருக்குத் தண்டனை வழங்குவோம்.

இலங்கையில் கல்வி,சுகாதாரம், வெளிவிவகாரம், சமூக நலன்,பொது விவகாரம் உள்ளிட்ட துறைகளில் நிலையான கொள்கை ஒன்று கிடையாது. காலத்துக்கு காலம் வெளிவிவகார கொள்கைகள் மாற்றியமைக்கப்படுகின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வெளிவிவகார கொள்கை எவ்வகையில் காணப்பட்டது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

மஹிந்த ராஜபக்ஷவை விலைக்கு வாங்கியதை போன்று எங்களை உலக நாடுகளால் விலைக்கு வாங்க முடியாது.இந்திய விஜயத்தின் போது பல விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டன.நாட்டின் தேசிய வளங்களைத் தாரைவார்க்க ஒத்துழைப்பு வழங்குவதாக நாங்கள் குறிப்பிடவில்லை. காலவோட்டத்துக்கு பின்னர் உலகமும்,அரசியலும் மாற்றமடைந்துள்ளது,ஆகவே நாங்களும் மாற்றமடைந்துள்ளோம் என்று இந்திய வெளியுறவு அமைச்சரிடம் குறிப்பிட்டோம்.இந்தியாவும் சகல துறைகளிலும் கொள்கைகளைப் புதுப்பித்துள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடு என்ற ரீதியில் தனித்துச் செயற்பட முடியாது,சகல தரப்பினரின் ஒத்துழைப்புடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.நாட்டுக்கும்,நாட்டு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நாட்டுக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான வெளிவிவகார கொள்கையிலிருந்துக் கொண்டு நாங்கள் செயற்படுவோம் என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.