காங். முன்னாள் தலைவர் ராகுல் சமீப காலமாக தமிழகம் மீதும் தமிழ் மீதும் அதிக பாசமாக உள்ளார். பார்லி.யில் தமிழகம் குறித்து பேசியது மட்டுமல்லாமல் ‘நானும் தமிழன் தான்’ என ஒரு போடு போட்டார்.
தமிழகம் மட்டுமன்றி கேரளா மீதும் அதிக ஆர்வம் காட்டுகிறார் ராகுல்.சமீபத்தில் இவருக்கும் இவருடைய சகோதரி பிரியங்காவிற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் உருவானதாம். அதன்படி வட மாநில விவகாரங்களை பிரியங்கா கவனித்துக் கொள்வாராம். தென் மாநில காங். விஷயங்களை ராகுல் பார்த்துக் கொள்வாராம்.
‘கடந்த லோக்சபா தேர்தலில் உ.பி.யின் அமேதி தொகுதியில் ராகுல் தோற்ற பின் தனக்கு வட மாநிலங்களில் மதிப்பு இல்லை என்பதை அவர் உணர்ந்து கொண்டார். எனவே தான் தமிழகம் கேரளா என தென் மாநிலங்களில் அவர் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்’ என காங். தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
‘இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது இந்த தமிழ் பாசம் எங்கே போனது’ என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை.