நாட்டை விட்டு தப்பிச் சென்ற 42 குற்றவாளிகளை கைது செய்ய 42 சிவப்பு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இந்த 42 பேரையும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு நெருக்கமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டுபாய் மாநிலத்தில் இருந்து நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பலத்த போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான குடு சலிந்துவின் பிரதான சிஷ்யனான பியூமாவிடம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல ஆபத்தான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள ஹரக் கட்டாவினை தப்பிச் செல்ல உதவிய தற்போது தலைமறைவாகியுள்ள பொலிஸ் உத்தியோகத்தரும் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என பதில் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.