கிரிஷ் கொடுக்கல் – வாங்கல் ஊடாக 70 மில்லியன் ரூபாவை குற்றவியல் முறைகேடு செய்ததாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று(18) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினரை ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் 10 மில்லியன் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன உத்தரவிட்டார்.
அத்துடன் பிரதிவாதியின் கைவிரல் அடையாளங்களை பதிவு செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய கோப்புகள் மேல் நீதிமன்றிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதிபதி பகிரங்க மன்றில் அறிவித்தார்.
முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணை அதிகாரிகள் மன்றில் ஆஜராகியிருந்ததுடன், அடுத்த வழக்கு நாட்களிலும் ஆஜராகுமாறு அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
சட்ட மாஅதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா ஆஜராகியிருந்ததுடன் பிரதிவாதியான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.