ஈரானின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்துள்ளார்.
ஈரான் வெளிவிவகார அமைச்சர் உட்பட 20 பேர் கொண்ட தூதுக்குழுவினர் நேற்று (19) இரவு நாட்டை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து அந்நாட்டு அரசாங்கத்திற்கு சொந்தமான விசேட விமானம் மூலம் நாட்டுக்கு வந்த குழுவினரை, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய வரவேற்றார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில் நாடு வந்த ஈரான் வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்க உள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.