போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள எந்தவொரு நடவடிக்கையையும் நிறுத்தத் தயாரில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
மேலும், 2023 டிசம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட “யுக்திய” நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 7.8 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இவ்வாறு தெரிவித்தார்.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குதல் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் இந்த செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நாங்கள் தயாராக இல்லை என பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட “யுக்திய” நடவடிக்கையின் மூலம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் கட்டிடங்களின் பெறுமதி 725 மில்லியன் ரூபா. அதற்காக செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை 58,562. அந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,234 ஆகும் என பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.