மக்களுக்கு எரிபொருள் விநியோகத்தை தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (22) இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளார்.
எரிபொருட்களின் விலையை அதிகரிக்காமல் இருப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
“எரிபொருள் விலைகளை அதிகரிக்காமல் தொடர்ந்து எரிபொருளை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது. இன்று எங்களிடம் உள்ள எரிபொருளுக்கான பணம் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து தொடர்பில் அனைவரும் கலந்துரையாடினோம். தற்போதைக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது.
அத்துடன், இ.போ.ச.வின் கடன்களுக்கு தேவையான நிதியை வழங்க நிதி அமைச்சின் செயலாளர் இணங்கினார். பின்னர் திங்கட்கிழமைக்குள் சுமார் 80 பில்லியன் ரூபா பெறப்படும் ”.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார்.