இராஜதந்திர உறவுகளை நிறுவியதன் 65வது ஆண்டு நிறைவையும், இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவையும் கொண்டாடும் சந்தர்ப்பத்தில், இலங்கைத் தூதரகம் சி.ஐ.டி.எஸ். வெளிநாட்டு பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனத்துடன் இணைந்து 2022 பெப்ரவரி 18ஆந் திகதி தூதரக டிக்டொக் கணக்கை ஆரம்பித்தது. தூதரகம், இலங்கைக் கலாச்சாரம், தயாரிப்புக்கள் மற்றும் குறிப்பாக இலங்கையின் சுற்றுலா மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கைகளை இந்த டிக்டொக் கணக்கு ஊக்குவிக்கும்.
டிக்டொக் என்பது சீனாவில் மிகவும் பிரபலமான சமூக ஊடகத் தளமாகும். உலகெங்கிலும் உள்ள சுமார் 2.4 பில்லியன் மக்கள் நாளாந்தம் டிக்டொக்கை அணுகுவதுடன், சுமார் 2 பில்லியன் மக்கள் செயலில் உள்ள பயனர்களாக உள்ளனர்.
இதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய தூதுவர் கலாநிதி பாலித கொஹொன, இலங்கை குறித்த விழிப்புணர்வை, குறிப்பாக சீன மக்களிடையே கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் திறனை அதிகரிப்பதற்கு இந்தக் கணக்கு மிகவும் உதவியாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். இது அதிகளவான சீன சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஊக்குவிக்க உதவியாக இருக்கும் என மேலும் தெரிவித்தார். தேசிய வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான சீன சபையின் உப தலைவர் கலாநிதி. காவ் ஃபூவும் இந் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
தூதரகத்தின் உத்தியோகபூர்வ டிக்டிடாக் கணக்கு தொடர்பான அனைத்து செலவுகளையும் சி.ஐ.டி.எஸ். வெளிநாட்டு பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம் ஏற்றுக் கொள்ளும்.
இலங்கைத் தூதரகம்,
பெய்ஜிங்