தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக வரையறுத்து வௌியிடப்பட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி 20 தோட்ட நிறுவனங்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை மனு தொடர்பிலான விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சோபித்த ராஜகருணா, மாயாதுன்னே கொரயா உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அக்கரப்பத்தனை தோட்ட நிறுவனம், எல்பிட்டிய தோட்ட நிறுவனம் உள்ளிட்ட 20 தோட்ட நிறுவனங்களினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பினால், பெருந்தோட்டத்துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட 18 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவா அதிகரிக்க சம்பள நிர்ணய சபை வழங்கிய அனுமதியை, வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கியுள்ளதாக தெரிவித்துள்ள மனுதாரர்கள் அது சட்ட விரோதமான தீர்மானம் என தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு பாரியளவு வரியை செலுத்துகின்ற மனுதாரரான நிறுவனங்கள், சம்பள அதிகரிப்பினூடாக அசௌகரியத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விடயங்களை ஆராய்ந்ததன் பின்னர், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்திருந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு அறிவித்தலும் பிறப்பித்திருந்தது.
இதற்கிணங்க, பிரதிவாதிகள் தரப்பில் விடயங்கள் இன்று முன்வைக்கப்பட்டன. மனு தொடர்பிலான மேலதிக விசாரணை மார்ச் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.