20 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் கூறி 48 வயதுடைய நபரொருவரை மெட்ரோபொலிடன் காவல்துறையின் போர்க்குற்ற விசாரணைக் குழுவினர் பிரித்தானியாவில் கைது செய்துள்ளனர்.
பிப்ரவரி 22ம் திகதி செவ்வாய்கிழமை நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள பகுதியில் அந்த நபர் கைது செய்யப்பட்டதாக பிரிட்டிஷ் பொலிசார் தெரிவித்தனர்.
“சர்வதேச குற்றவியல் நீதிமன்றச் சட்டம் 2001 இன் பிரிவு 51 இன் கீழ் குற்றங்கள் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்,” என்று காவல்துறை மேலும் கூறியது.
சந்தேக நபர் விடுவிக்கப்பட்டுள்ள போதும் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
“இது ஒரு முக்கியமான, சிக்கலான விசாரணையின் குறிப்பிடத்தக்க புதுப்பிப்பாகும்,” என்று Met இன் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டளைக்கு தலைமை தாங்கும் தளபதி ரிச்சர்ட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
“குறிப்பாக நிமல்ராஜனின் கொலை தொடர்பாக இன்னும் சிலருக்கு தகவல்கள் தெரிந்திருக்கலாம், நிமல்ராஜனின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க முன்வருமாறு அவர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” என அவர் கூறியுள்ளார்.
நிமலராஜன், பிபிசி தமிழ் மற்றும் சிங்கள சேவைகள், தமிழ் நாளிதழ் வீரகேசரி மற்றும் ராவய சிங்கள வார இதழில் பணியாற்றிய மூத்த ஊடகவியலாளர்.
2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.