நிலாவரையில் இராணுவத்தினரால் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட பௌத்த வழிபாட்டு இடமும் புத்தர் சிலையும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்களின் தலையீட்டினை அடுத்து உடனடியாக அகற்றப்பட்டுள்ளது.
நிலாவரை ஆழமற்ற கிணற்றுப் பகுதியில் இரவோடு இரவாக புத்தர் சிலையும் பலகையிலான அமைக்கப்பட்ட சிறு அறை வடிவிலான கட்டுமானமும் கொங்கிறீட் இடப்பட்டு நாட்டப்பட்டுள்ளது.
இதனை கண்ணுற்ற மக்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருக்கு இரகசியமாக தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அவ்விடத்திற்கு தவிசாளர் மற்றும் உப தவிசாளர் உள்ளிட்டவர்கள் சென்றுள்ளனர்.
இராணுவச் சிப்பாய் ஒருவர் பலகையினால் அரச மரத்தின் கீழ் நடப்பட்டிருந்த வழிபாட்டு இத்தில் இருந்து புத்தரை எடுத்துச் சென்றுவிட்டார். தொடர்ந்து தவிசாளர் உடனடியாக அவ் வழிபாட்டு இடத்தினை அகற்றுமாறும் நீதிமன்றத்தில் ஏற்கனவே இது தொடர்பான வழக்குகள் உள்ளன நிலையில் யார் இவ்வாறு செயற்பட்டது கேட்க, அவ்விடத்தில் சீருடையில் நின்றிருந்த இராணுவ சிப்பாய்கள் தொலைபேசியில் எவருடனோ உரையாடிவிட்டு குறித்த பலகையிலான கட்டுமானத்தினை அடியோடு அகற்றி அருகில் இருந்த இராணுவ முகாமிற்கு எடுத்துச் சென்றனர்.
இந் நிலையில்; அச்சுவேலி பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தவிசாளரிடம் பிரச்சினை தொடர்பாக கேட்டறிந்தனர். பொலிசாரின் வருகையுடன் அயல் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியும் வருகை தர தவிசாளர் தமிழ் மக்களின் பிரதேசத்தில் அவர்களது பிரதேசத்தினை இராணுவ அனுசரனையில் பௌத்த மயமாக்க மேற்கொள்ளப்படுவதை கண்டித்ததுடன் பற்றியும் இனி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது எனவும் விசனத்தினைத் தெரிவித்தபோது, இராணுவப் பொறுப்பதிகாரி இங்கு காவல் கடமையில் இருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் குறித்த இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களும் நேரில் நிலைமைகளை ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இவ் வளாகத்தில் இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்களமும் ஏற்கனவே இரண்டு தடவைகள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிலத்தில் அத்திபாரம் போன்று வெட்டிய நிலையில் அதனைத் தடுத்தமைக்காக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக அரச கருமத்திற்கு தடை ஏற்படுத்தியதாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அவ்வழக்கில் சட்ட மா அதிபரின் பெறப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.