இந்தியாவுடன் முதல் போட்டியில் இலங்கை தோல்வி

0
180

இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் 20 ஓவர் போட்டி லக்னோவில் இன்று நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 56 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 89 ஓட்டங்கள் குவித்தார். ரோகித் சர்மா 44 ஓட்டங்கள், ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களும் சேர்த்தனர்.

இதையடுத்து 200 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் துவக்கத்திலேயே தடுமாறியது. துவக்க வீரர் நிசங்கா ஓட்டம் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அதன்பின்னரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.

60 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகள் இழந்த நிலையில், போராடிய அசலங்கா அரை சதம் கடந்து ஆறுதல் அளித்தார். எனினும் இலங்கை அணியால் இலக்கை எட்ட முடியவில்லை.

20 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்களே சேர்த்தது. அசலங்க 53 ஓட்டங்களுடனும், சமீரா 24 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் புவனேஸ்வர் குமார், ஸ்ரேயாஸ் அய்யர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டி கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி 26ம் திகதி தரம்சாலாவில் நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here