ரஷியா – உக்ரைன் இடையே நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

0
254

உக்ரைன் மீதான ரஷிய போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது ஒட்டு மொத்த உலகின் எதிர்பார்ப்பாக உள்ளது. போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அந்த வகையில் உக்ரைன் மீது உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வரும் ரஷியா பேச்சுவார்த்தை இணங்கி வந்தது. அதன்படி பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு விடுத்தது.

முதலில் பேச்சுவார்த்தைக்கான இடத்தை மாற்ற வேண்டும் என நிபந்தனை விதித்த உக்ரைன் பின்னர் சம்மதம் தெரிவித்தது. அதனை தொடர்ந்து இரு நாடுகளை சேர்ந்த பிரநிதிகள் குழு பெலாரஸ் விரைந்தன.

இந்த நிலையில் இந்திய நேரப்படி நேற்று மாலையில் உக்ரைன்-ரஷியா இடையிலான சமரச பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

சமரச பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் பிரதிநிதிகள், “ரஷியா உடனடியாக போரை நிறுத்த வேண்டும்; தனது படைகள் உக்ரைனை விட்டு முழுமையாக வெளியேற ரஷியா உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தது. முடிவில் பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.

இந்தநிலையில், இன்று நடைபெற்ற 6-வது நாள் போரில் அரசு கட்டிடங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றது.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது ரஷிய படைகள் குண்டு மழை பொழிந்தன. இதில், இந்தியாவை சேர்ந்த ஒரு மாணவர் பலியானார். மேலும், ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

கீவ் நகரில் உள்ள உளவுத்துறையின் கட்டிடத்தின் அருகே வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு ரஷியா அறிவுறுத்தியுள்ளது.

இந்தநிலையில், ரஷியா – உக்ரைன் இடையே நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக ரஷிய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

பெலாரஸ் நாட்டில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படாத நிலையில் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here