ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக எஸ்.சி. முத்துக்குமாரன இன்றையதினம் (05) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அநுராதபுர மாவட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு எஸ்.சி. முத்துகுமாரன நியமிக்கப்பட்டார்.
1953ஆம் ஆண்டு பிறந்த எஸ்.சி.முத்துகுமாரன அநுராதபுரம் மத்திய கல்லூரியில் தனது கல்வியைப் பெற்றுக்கொண்டார். இவர் 1977ஆம் ஆண்டு தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். 1991ஆம் ஆண்டு கலாவெவ பிரதேச சபைக்குத் தெரிவுசெய்யப்பட்டதுடன், 1993 மற்றும் 1999ஆம் ஆண்டுகளில் வடமத்திய மாகாணசபைக்குத் தெரிவுசெய்யப்பட்டார்.
சுதந்திரக் கட்சியின் கலாவெவ கிளையின் பிரதித் தலைவராகவும் அவர் பணியாற்றியிருந்தார். அத்துடன், 2000ஆம் ஆண்டு வடமத்திய மாகாணசபையின் கமத்தொழில் அமைச்சர் பதவியையும் வகித்திருந்தார். 2010ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் அநுராதபுர மாவட்டத்திலிருந்து ஏழாவது பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.