இழுவைமடி தொடர்பான சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சை வலியுறுத்தி போராட்டத்தை நடத்துவதற்கு வடக்கு மீனவர்கள் தீர்மானித்துள்ளனர். அத்துடன் இந்திய, தமிழக, இலங்கை அரசுகளுக்குக் கடிதம் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மீனவர் சங்கப் பிரதிநிதிகளுக்கும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தவிர்ந்த வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாண நகரிலுள்ள விடுதியில் இடம்பெற்றது.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மற்றும் இறுதியாக எட்டப்பட்ட முடிவுகள் தொடர்பாக ஆலோசனைக் குழுவின் அங்கத்தவர் மூத்த விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கைக் கடற்பரப்பினுள் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்குவதை ஏற்றுக்கொள்ளமாட்டோம். இந்திய இழுவைமடிப் படகுகளை அடிப்படையிலேயே எதிர்க்கின்றோம். இந்திய இழுவைமடி மற்றும் வெளிநாட்டு படகுகள் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரும் கடிதத்தில் வடக்கு மாகாணத்தின் அனைத்து மீனவ சமாசங்களும் கையெழுத்திட்டு இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் வழங்கவுள்ளோம்.
2016 ஆம் ஆண்டு இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கிடையே இடம்பெற்ற ஒப்பந்தத்தில், சூழலுக்கு பாதிப்பாக அமையும் இழுவைமடிகளை நிறுத்த வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாக வைத்து நாங்கள் அடுத்தடுத்த விடயங்களை மேற்கொள்ள வேண்டும்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத வடக்கு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த அறிக்கையில் கையொப்பமிடக் கூறுவோம். அவர்கள் கையொப்பமிடாத பட்சத்தில் அவர்களுடைய உண்மை முகங்கள் வெளிச்சத்துக்கு வரும். மேலும் மீனவர்களாலும் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது” – என்றார்.
N.S