இலங்கை அணிக்கு இன்னிங்ஸ் தோல்வி

0
170

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் 4-ந்தேதி போட்டி தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்த இந்திய, முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ஓட்டங்கள் குவித்தது. ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 ஓட்டங்கள் குவித்தார்.

பின்னர், இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் ஜடேஜா ஐந்து விக்கெட் வீழ்த்த இலங்கை அணி 174 ஓட்டங்களில் சுருண்டது. இந்திய அணி தலைவர் ரோகித் சர்மா இலங்கை அணியை தொடர்ந்து பேட்டிங் செய்ய அனுமதித்தார்.

2-வது இன்னிங்சிலும் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் லஹிரு திரிமன்னே ஓட்டம் ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். திமுத் கருணாரத்னே 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த நிசாங்கா 7 ஓட்டம், மேத்யூஸ் 28 ஓட்டங்கள், டி சில்வா 30 ஓட்டங்கள் என வெளியேறினர். விக்கெட் காப்பாளர் திக்வெல்ல மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி அரைசதம் அடித்தார்.

முதல் இன்னிங்சில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 2-வது இன்னிங்சிலும் அசத்தினார். சுரங்கா லக்மல் (0), எம்புல்டேனியா (2) ஆகியோரை எளிதில் வீழ்த்தினார்.

அரைசதம் அடித்த திக்வெல்லா கடைசி வரை போராடினாலும், அதற்கு எந்தவித பலனும் கிடைக்காமல் போனது. இலங்கை அணி 60 ஓவரில் 178 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2-இன்னிங்சில் திக்வெல்ல 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here