Saturday, May 4, 2024

Latest Posts

ஜனாதிபதி ரணில் மீது சஜித் குற்றச்சாட்டு

நாட்டை சீரழித்தவர்களை பாதுகாக்கும் செயற்பாடுகளிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுபடுகின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பெப்ரவரி 20ஆம் திகதி இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட பிணைப் பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல், வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச் சீட்டுக்கள் (திருத்தச்) சட்டமூலம், ஈட்டுச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம், நிதி குத்தகைக்குவிடுதல் (திருத்தச்) சட்டமூலம், உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்புத் (திருத்தச்) சட்டமூலம், கம்பனிகள் (திருத்தச்) சட்டமூலம், ஆவணங்கள் பதிவுக் கட்டளைச் சட்டம் (திருத்தச்) சட்டமூலம் ஆகியன மீதான மூன்றாம் நாள் விவாதம் புதன்கிழமை (06) பாராளுமன்றத்தில் நடைபெற்ற போது அதில் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி உரையாற்றும் போது நரகம் தொடர்பிலும் தொங்கு பாலம் தொடர்பிலும் குறிப்பிட்டார். ஆனால் நரகத்தின் நிறுவனர்களை நீங்கள்தானே பாதுகாக்கின்றீர்கள். இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றவர்களிடமிருந்து நாட்டு மக்கள் நஷ்ட ஈட்டை பெறுவதை தடுத்தது நீங்கள்தானே. நாட்டின் சொத்துக்களை கிடைக்கச் செய்யாது இருப்பவரும் நீங்கள்தானே. திருடர்களின் ஆணையில் பதவிக்கு வந்தவர் நீங்களே. நாட்டை சீரழித்த ராஜபக்‌ஷக்கள் அந்த தொங்குபாலத்தில் மேலே வர உதவுபவரும் நீங்களே. உங்களின் செயற்பாடுகளால் 220 இலட்சம் மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர். நீங்கள் இந்த நாட்டு மக்களுக்கு வழங்கும் தீர்வுதான் என்ன? என்று ஜனாதிபதியிடம் கேட்கின்றேன்.

இதேவேளை தான் பெரிய தீ பிழம்புக்குள் பாய்ந்துள்ளதாகவே ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் அவர் உண்மையில் பாய்நதது தீ பிழம்புக்குள் அல்ல. திருடர்கள் கூட்டத்திற்குள்ளேயே ஆகும்.

ஒருபோதும் தனக்கு வாக்குகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியாததை திருடர்கள் மூலம் பெற்றுக்கொண்டுள்ளார். மாதாந்தம் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்கின்றார். நிகழ்நிலைக் காப்புச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் மூலம் ஒடுக்குமுறைகளை செய்ய முயற்சிக்கின்றார். சிம்மாசன உரையை மேற்கொள்ள ஆசையில் இருக்கின்றார்.

அரசியலமைப்பு பேரவையை நிறைவேற்றுத்துறையின் பொம்மையாக மாற்ற முயற்சிக்கின்றார். சபாநாயகருடன் இணைந்து அரசியலமைப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எந்த கருத்தும் இப்போது கூறுவதில்லை. தொங்கு பாலத்தில் ஏறி மேலே வந்தவர்கள் நாட்டை சீர்குலைத்த ராஜபக்‌ஷ குழுக்களே ஆகும்.எவ்வாறாயினும் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வை ஐக்கிய மக்கள் சக்தி தயாரித்துள்ளது. பொருளாதார முன்னேற்றம் தொடர்பான வேலைத்திட்டத்தையே எதிர்பார்த்துள்ளோம். அனைவரையும் இணைத்த அனைவரும் நன்மையடையும் பொருளாதார வளர்ச்சியையே எதிர்பார்க்கின்றோம் என்றார் .

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.