2,100 நாட்களைக் கடந்து தொடரும் தமிழ்த் தாய்மாரின் போராட்டம்

Date:

காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகம் வடக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தமிழ்த் தாய்மாரிடம், வலுக்கட்டாயமாக தகவல்களை பதிவு செய்வதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகத்திற்கு தாம் தொடர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், அந்த அலுவலகத்தின் அதிகாரிகள் தமிழ்த் தாய்மாரிடம் கட்டாயப்படுத்தி தகவல்களை பதிவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என, வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி சிவானந்தன் ஜெனிற்றா தெரிவிக்கின்றார்.

“ஓஎம்பி அலுவலகத்திற்கு எதிராக நாங்கள் எதிர்த்து போராடுகின்ற போது கச்சேரி ஊடாக வலுக்கட்டாயமாக கடிதம் அனுப்பியிருக்கின்றார்கள்.

அந்த கடிதத்தின் ஊடாக அவர்கள் வராத பட்சத்தில் அவர்களை வீடு வீடாகச் சென்று அந்த பதிவுகளை மேற்கொண்டு அவர்களுக்கு வாகனத்தை அனுப்பி ஏற்றி அவர்களுக்கான பதிவுகளை மேற்கொண்டு இந்த சர்வதேசத்தையும் ஏமாற்றி எமது உறவுகளையும் ஏமாற்றிக்கொண்டுதான் இவர்கள் இந்த அலுவலகம் ஊடாக பணியாற்றுகின்றார்கள்.”

சர்வதேச மகளிர் தினமான நேற்றைய தினம் (மார்ச் 08), முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உள்ள சுற்றுவட்ட பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியையும் ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கடந்த கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 08ஆம் திகதி அன்று ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஏழு ஆண்டுகள் பூர்த்தியாவதை நினைவுப்படுத்தியும், மகளிர் தினத்தை துக்க தினமாக அறிவித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் தென்பகுதியில் இருந்து வருகைத் தந்த மதகுருமார் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இணைந்து கொண்டனர்.

“இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்,” “நீதி தேவதை ஏன் கண்மூடி விட்டாய்,” “சர்வதேசமே இன்று பெண்கள் தினமா,” “பெண்கள் ஒடுக்கப்படும் தினமா,” “முடிவில்லா துயரம் தான் தமிழ் தாயின் தலைவிதியா,” “55ஆவது தொடரிலாவது எமக்கு நீதி கிடைக்குமா,” “கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும்” போன்ற கோசங்களை ஆர்ப்பாட்டக்கார்கள் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி, மகளிர் தினமாகிய இன்றைய தினத்தை (நேற்றைய தினம்) துக்க தினமான அனுஷ்டிப்பதாகவும், அடுத்த வருடத்திலாவது மகளிர் தினத்தை சுதந்திரமாக கொண்டாடும் வகையில் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு முன்பாக கடந்த 2017ஆம் ஆண்டு இதுபோன்றதொரு நாளில் தமது தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

பாதுகாப்புத் தரப்பினரிடம் கையளிக்கப்பட்ட நிலையிலும், சரணடைந்த நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளைத் தேடி தமிழ்த் தாய்மார் ஆரம்பித்த இந்த போராட்டம் இன்று 2,210 நாட்களை எட்டியுள்ளது.

எனினும் உறவுகளுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கமோ, பாதுகாப்புத் தரப்பினரோ இதுவரை பதிலளிக்கவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...