Saturday, January 11, 2025

Latest Posts

இலங்கைத் தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை: என்ன சிக்கல்?

  • மாத்தளை சோமு

தமிழகத்தில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாகத் தங்கியிருக்கிற, இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்திவருகின்றன. ஆனால், முன்னர் ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் அரசும், இப்போதைய மோடி அரசும் சாதகமான பதிலைக் கொடுக்கவில்லை. தமிழகத்துக்கு 1964-க்குப் பிறகு, தாயகம் திரும்பிய அகதிகளும் 1983-க்குப் பிறகு ‘தஞ்சம் தேடிய அகதிகளும்’ வந்தார்கள்.

1964-ல் இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயகாவும், இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, ஆங்கிலேயரின் ஆட்சியின்போது குடியேற்றப்பட்ட மலையகத் தமிழர்கள் என அழைக்கப்படும் தோட்டப்புறத்தில் வாழ்ந்த 5 லட்சத்து 25 ஆயிரம் இந்திய வம்சாவளித் தமிழர்கள் தாயகம் திரும்பிய அகதிகளாக வந்தார்கள். இதற்குப் பதிலாக இலங்கையில் இருந்த 3 லட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட்டது. இரு சாராரும் தீர்வு காணாத ஒரு லட்சத்து 50 ஆயிரம் தமிழ் மக்கள் ‘நாடற்றவர்களாக’ இலங்கையில் இருந்தார்கள். ‘நாடற்றவர்கள்’ (Stateless) என்ற சொல்லின் பொருளையும், அச்சொல்லின் பின்னால் வாழ்ந்த மக்களின் துன்பங்களையும் அரசியலர்களும் பெரும்பான்மையான மக்களும் உணர்ந்திருக்கவில்லை.

ஆங்கிலேயர்கள் இந்தியாவையும் இலங்கையையும் ஆண்டபோது, காபி, தேயிலைப் பயிர் செய்கைக்காகத் தமிழகத்திலிருந்து மக்களைத் தொழிலாளர்களாகக் கொண்டுசென்றனர். 1827-ல் 10 ஆயிரம் தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டதோடு அவர்களின் வருகை தொடங்கியது. இதனால் 1911-ல் தோட்டப் பகுதியில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 983 தமிழர்கள் இருந்தார்கள். 1936-ல் இத்தொகை 11 லட்சத்து 23 ஆயிரமாகக் கூடியது.

1948-ல் இலங்கை சுதந்திரம் பெற்றது, 1949-ல் அப்போதைய பிரதமர் டி.எஸ்.சேன நாயக்கர் கொண்டுவந்த பிரசாவுரிமை சட்டத்தால் சுமார் 10 லட்சம் தோட்டப்புறத் தமிழர்கள் நாடற்றவரானார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், 1947-ல் நடந்த பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு வாக்களித்து, ஏழு இந்திய வம்சாவளித் தமிழர்களை உறுப்பினர்களாகத் தெரிவுசெய்தவர்களே புதிய சட்டத்தில் நாடற்றவரானார்கள். இச்சட்டம் இலங்கையில் தமிழர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது.

இச்சட்டத்தால் நாடற்றவர்கள் தொழிலாளர்களாக வேலை செய்து வாழலாம். உயர்கல்வி இல்லை. சிறு வர்த்தகம்கூடத் தொடங்க முடியாது. நாட்டை விட்டுப் போக இயலாது. சுருக்கமாகச் சொன்னால், தோட்டங்கள் என்ற திறந்தவெளிச் சிறையில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் இந்தியாவையே அறியாதவர்கள். இலங்கையில் பிறந்தவர்கள். இவர்களில் 1940-க்குப் பிறகு குறைந்த எண்ணிக்கையிலானவர்களே இலங்கை வந்தவர்கள். இவர்களை உள்ளடக்கியதே சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தமும் அதற்குப் பிறகு செய்யப்பட்ட அகதிகள் குறித்த ஒப்பந்தமும்.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் வாழ்ந்த, அங்கேயே பிறந்த மலையகத் தமிழர்களை நாடற்றவராக்கியதன் உள்நோக்கமே, இலங்கையில் தமிழர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே ஆகும். இதனைச் செய்வதற்காக சிங்கள அரசியலர்கள் கட்சியைத் தாண்டிக் கைகோத்தனர். இதற்கு அப்போதைய தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் உள்ளிட்ட சிலரும் கைதூக்கினார்கள். எஸ்.ஜே.வி.செல்வநாயகம் சட்டத்தை எதிர்த்தார். ஆனாலும், சட்டம் அமலாகி, அந்த மக்கள் நாடற்றவர்களாக வாழ்ந்தார்கள். 1958, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழருக்கு எதிராக நடந்த இனக் கலவரத்தில் அந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள்.

1983-க்குப் பிறகு, இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தால் பாதிப்படைந்த இலங்கைத் தமிழர்கள் ‘அகதிகளாக’ தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். இவர்களில் இந்திய வம்சாவளித் தமிழர்களும் அடங்குவார்கள். ஆனால், அவர்களில் பெரும்பான்மையானோர் இலங்கை திரும்பிவிட்டனர். ஏனைய இலங்கைத் தமிழர்கள், தமிழக அகதிகள் முகாம்களில் இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேலே இருக்கும். எப்படிப் பார்த்தாலும், இவர்களின் அகதி வாழ்க்கை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இவர்களின் முகாம் வாழ்க்கை மோசமானதென்று குற்றச்சாட்டுகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதே காலகட்டத்தில், வேறு நாடுகளுக்குச் சென்ற தமிழ் அகதிகள், செல்வ வளத்தோடும் அவர்களின் பிள்ளைகள் உயர் பதவிகளிலும் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள அகதிகளின் நிலையோ கேள்விக்குறியாக இருக்கிறது.

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு, மத்திய, மாநில அரசுகளின் புலனாய்வு அமைப்புகளின் கெடுபிடி கடுமையாக ஆனது. மொத்தத்தில், அவர்களின் வாழ்க்கை துன்பக்கேணியைப் போன்றது. இந்நிலையில், அவர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற ‘அரசியல்’ சூடுபிடித்துள்ளது. அதே நேரத்தில், இலங்கைக் குடியுரிமை கொண்டவர்களான இவர்களைத் திரும்ப அழைப்பதில் இலங்கை அரசு அக்கறையே காட்டவில்லை. அதற்கு முக்கியக் காரணம், இந்தியாவுக்குள் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை அகதிகளாக அனுப்பி வைத்த அரசியல் தந்திரமே ஆகும். இந்நிலையில், இப்போது அகதிகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கினால், அது இலங்கை அரசுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும். அகதித் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குவதால், 1. இலங்கைத் தமிழரின் மக்கள்தொகையில் வீழ்ச்சி உருவாகும், 2. அவர்கள் வாழ்ந்த இடங்கள் சிங்கள ஆக்கிரமிப்புக்கு ஆளாகும், 3. நாடாளுமன்ற உறுப்பினர் தொகை குறையும்.

ஏற்கெனவே, ஒப்பந்தத்தின் மூலம் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகளைத் தமிழகம் உள்வாங்கியிருக்கிறது. கச்சத்தீவு கைமாறிப் போய்விட்டது. முள்ளிவாய்க்கால் யுத்த முடிவுக்குப் பிறகும் அரசியல் முடிவும் வரவில்லை. சீனர்களின் ஆதிக்கம் இலங்கையில் அதிகமாகியிருப்பதோடு, சீனர்களின் குடியேற்றமும் கூடியிருக்கிறது. சீனர்களை அழைக்கும் இலங்கை அரசு, தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர்கள் குறித்து மெளனம் சாதிப்பதன் பின்னணியை உணர வேண்டும். ஆகவே, தமிழகத்தில் தங்கியிருக்கும் அகதிகளின் நிலையை இரு வகையில் கையாளலாம்: 1.இந்தியாவில் தங்க விரும்புபவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கலாம். 2.மற்றவர்கள் தாயகம் திரும்புவதற்கு இலங்கை அரசோடு பேசி முடிவு காண வேண்டும்.

இப்பிரச்சினைக்கு முடிவு காணும் வரை, 1.தமிழகத்தில் தங்கியிருக்கும் தமிழ் அகதிகளுக்குத் தனியான அடையாள அட்டை (எப்போது வந்தார்கள், எங்கே இருக்கிறார்கள் என்பது போன்ற விவரங்களுடன்) வழங்க வேண்டும். 2.தனியாரிடம் வேலை செய்ய அனுமதிப் பத்திரம் வழங்க வேண்டும். 3.மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்க வேண்டும். 4.வாழ்வாதாரத்துக்கான நிதி, உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும். 5.நாடு திரும்புகிறவர்களுக்கு ஒரு தொகை கொடுத்தனுப்ப வேண்டும்.

இவற்றையெல்லாம் உணராமல் குடியுரிமை வழங்குவது குறித்துப் பேசாமல் இருப்பது இலங்கை அரசுக்கு மறைமுகமாக உதவி செய்வதாகும். எதிர்காலத்தில் அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுக்குப் போனால், அவர்களை இந்தியா ஏற்றுக்கொள்ளும். அதன் மூலம், இலங்கையில் தமிழர் மக்கள்தொகையைக் குறைக்க முடியும் என்ற தந்திரத்துக்குப் பச்சைக்கொடி காட்டுவதாக முடியும்.

  • மாத்தளை சோமு, எழுத்தாளர், ஆஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.