ஈபிடிபியின் தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சுமார் 10 மில்லியன் ரூபா (ஒரு கோடி) பெறுமதியான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியிலுள்ள ஈ.பி.டி.பி தலைமை அலுவலகக் கட்டிடத்திற்கான மின்சார விநியோகத்தில் சில காலமாக 9,736,677 ரூபா செலுத்த தவறியுள்ளதாக ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கட்டணம் செலுத்தாத நிலையிலும் கட்டிடத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என்றும் ஜெயலால் குறிப்பிட்டார்.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரக் கட்டணம் 12.5 மில்லியன் ரூபா வரை செலுத்த தவறியுள்ளதாக தொழிற்சங்கங்கள் வெளிப்படுத்தும் வரையில் இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ரஞ்சன் ஜயலால் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்கட்டணத்தை சரிபார்க்கும் அதிகாரிகளும், மின்கட்டணத்தை செலுத்தாமல் புறக்கணிப்பவர்களும் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் இதனால் இ.மி.ச.க்கு பாக்கியான பாரிய தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இதையெல்லாம் அம்பலப்படுத்த வேண்டியது தொழிற்சங்கங்கள்தான் என்றும் ஜெயலால் குறிப்பிடுகிறார்.