அரசாங்கம் மீண்டும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்தாவிட்டால் அடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 200 ரூபாவை தாண்டும் என சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாரிய நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதன்படி, அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் உடனடியாக விதிக்க வேண்டுமென தொழிற்சங்கம் கோருகின்றது.
இதேவேளை, அரிசியை பொதி செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொலிசாக் பை ஒன்றின் விலையை 35 ரூபாவினால் அதிகரிக்க உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதுடன், அதற்கேற்ப அரிசியின் விலையும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்புடன் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரிசி இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.