அரசியலமைப்பின் படி, 2024-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த சில மாதங்களாக பொதுத் தேர்தல் பற்றி பேசப்பட்டு வருகிறது.
அதேநேரம், கடந்த சில நாட்களாக ஜனாதிபதி தேர்தல் வரப்போகிறது என்றும் 2025-ல் பொதுத் தேர்தல் வரப்போகிறது என்றும் கேள்விப்பட்டோம். ஆனால் மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் பற்றிய கதை ஒன்று வெளிவந்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாகவே பொதுத் தேர்தல் நடைபெறப் போகிறது என்ற பேச்சு, தீயாகப் பரவ ஆரம்பித்துள்ளது. சித்திரைப் புத்தாண்டு முடிந்தவுடன் பாராளுமன்றத்தைக் கலைத்து, ஜூலை மாத தொடக்கத்தில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு, பெசில் மற்றும் நாமல் ஆகியோர் ஜனாதிபதிக்கு பலத்த அழுத்தம் கொடுத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் ஊடாக, மந்திரி சபையைக் கலைப்பது தொடர்பில் ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிற்கும் எதிர்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையில் இரகசிய கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் ஒரு கதை உள்ளது.
பெசிலுக்கு நட்பாக இருக்கும் ஆசிரியர் ஒருவரை வைத்து, பத்திரிகையில் இப்படி ஒரு கதை விதைக்கப்பட்டிருந்தது. அந்த கலந்துரையாடலில், சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் பாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் இரு கட்சிகளின் சிரேஷ்டர்களும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
அதில் ஆர்வமுள்ள எம்பிக்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டு கணக்கிடவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இரு கட்சிகளின் சிரேஷ்டர்களது கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட விடயங்களை, கட்சித் தலைவர்களிடம் முன்வைத்து இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்றாலும், எம்பிக்கள் விரும்பினால், சபையைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தலை நடத்தலாம் என, பெசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அந்தக் கதைகள் எதுவாயினும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டியதன் அவசியத்தை, நாமல் ராஜபக்ஷ தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறார்.
“முதலில் ஒரு ஜனாதிபதித் தேர்தலுக்குச் சென்றால், எங்களின் ஆதரவைப் பெற்றாலும் ஜனாதிபதி தோற்றுவிடுவார். அப்படியானால், பொதுத்தேர்தலில் நமக்கு பாதகம் ஏற்படும். மீண்டும் உங்கள் முகவரியையும் இழப்பீர்கள். எனவே, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலுக்கு செல்வதே ஜனாதிபதிக்கு பாதுகாப்பானது என்பதை ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்.
“பொதுத் தேர்தலின் போது, எம்மால் ஃபைட் கொடுக்கலாம். சரி, ஒரு சிறிய தொகையில் தோற்றுப்போவதாகவே வைத்துக்கொள்வோம். ஆனால், ஐமசவில் சிலரையும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் சிலரையும் இணைத்துக்கொண்டு, ஜனாதிபதியால் தேசிய அரசாங்கத்தை அமைக்க முடியும். அதன் பின்னர் அந்த தேசிய அரசாங்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் லொக்காவை முன்னிறுத்த முடியும்.
“இல்லையென்றால், ஜனாதிபதித் தேர்தலுக்கு நேரடியாகச் சென்றால், நம் அனைவருக்கும் பெரிய ஆபத்து உள்ளது. இதுபற்றி ஜனாதிபதியிடம் விளக்கவும்” என்று, நாமல் கூறியுள்ளார். இந்த பிரேரணையை ஜனாதிபதி நிராகரித்தால், ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியின் ஆதரவை எதிர்பார்க்க வேண்டாம் எனவும், நாமல் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துமாறு, பெசில் மற்றும் நாமல் தரப்பு விடுத்த அச்சுறுத்தல்களை, ஜனாதிபதி விக்ரமசிங்க பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏனெனில், ராஜபக்ஷர்களை விட்டுவிட்டால், ஐமச போன்றே, தமிழ், முஸ்லிம் கட்சிகளின் எம்பிக்கள் பெருமளவானோரும், நிபந்தனையின்றி ஆதரவு அளிப்பதாக ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. லன்சா தரப்பும், அந்த முடிவில்தான் இருக்கின்றதாம்.
அது மாத்திரமன்றி, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஒப்புக்கொள்ளப்பட்டவாறு, விசேட சட்டங்களை நிறைவேற்றி பொருளாதார சீர்திருத்தங்களை துரிதப்படுத்துமாறு, ஜனாதிபதிக்கு சர்வதேச ரீதியில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் ஒரு கதையும் உள்ளது. எவ்வாறாயினும், நாமல் தரப்பா, அல்லது சர்வதேசம் கூறுவதையா ரணில் கேட்கப்போகிறார் என்ற விடயத்தை, இன்னும் சில வாரங்களில் அனைவரும் பார்க்கக்கூடியதாக இருக்கும்.
பார்க்கப்போனால், பெசில் மற்றும் நாமல் தரப்பினர் இணைந்து, ஜனாதிபதி விக்கிரமசிங்கவை சுவற்றில் சாய்க்கத்தான் பார்க்கிறார்கள்போல. இந்தக் கயிறிழுப்பு தொடர்ந்தால், மொட்டுக் கட்சிக்குள் மேலுமொரு பிளவை எதிர்பார்க்கலாம். அப்படி நடந்தால், இப்போதிருக்கும் நிலைமைகூட அற்றுப்போகலாம்.