Sunday, April 28, 2024

Latest Posts

வடக்கு – கிழக்கின் மக்கள் மனு சிவில் சமூகப் பிரதிநிதிகள்கொழும்பில் இன்று மனோ எம்.பியை நேரில் சந்தித்துப் பேச்சு

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியை, வடக்கு – கிழக்கின் மக்கள் மனு சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழு சந்தித்து உரையாடியது.

கொழும்பில் மனோ கணேசன் எம்.பியின் இல்லத்தில், இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மக்கள் மனு குழுவின் சார்பில் இணைப்பாளர் ஏ.ஜதீந்திரா, எஸ்.எஸ்.குகநாதன், எஸ்.மகாலிங்கசிவம் ஆகியோர் கலந்துகொண்டனர்.    

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இது பற்றி ஊடகங்களுக்குக் கூறியதாவது:-

“எமது சந்திப்பு மிகக் காத்திரமாக நடைபெற்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சிங்கள பிரதான கட்சி வேட்பாளர்கள் அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சிங்கள பிரதான கட்சித் தலைவர்களுடன், தமிழ்த் தேசிய பிரச்சினை தொடர்பில், மாகாண சபைகள் என்ற அடிப்படையில் பொது குறைந்த பட்ச உடன்பாட்டைக்  காண்பது தொடர்பில் கலந்துரையாட பட்டது.  

வடக்கு – கிழக்கு மக்கள் மனு சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவுடன், குறைந்த பட்ச உடன்பாட்டை காணும் சிங்கள பிரதான கட்சிகள், தலைவர்கள் தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் அந்த உடன்பாட்டை இடம்பெறச் செய்ய வேண்டும் எனக் கலந்துரையாடினோம்.

எதிர்வரும் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலா, ஜனாதிபதித் தேர்தலா, அவ்வாறாயின் சிங்கள பிரதான கட்சி வேட்பாளர்கள், பொது தமிழ் வேட்பாளர் ஆகிய விடயங்கள் பற்றியும் கலந்துரையாடினோம்.

“வாக்களியுங்கள், ஆட்சிக்கு வந்த பிறகு பார்ப்போம்” என்ற நிலைபாட்டுடன் தமிழ் மக்கள் மத்தியில் வந்து வாக்குக் கோர சிங்கள பிரதான கட்சிகள், கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் ஆகியோருக்கு இனிமேல் இடம் தர முடியாது என்ற பொது நிலைபாட்டைப் பற்றியும் உரையாடினோம்.  

தமிழ் முற்போக்குக் கூட்டணியால், மலையகத் தமிழர் தொடர்பில் சமூக நீதி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு அனைத்து சிங்கள பிரதான கட்சிகளுடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளது. எமது ஆவண நிலைப்பாடுகள், அந்தந்த கட்சிகளின் மற்றும்  வேட்பாளர்களின்  தேர்தல் விஞ்ஞாபனங்களில் இடம்பெறுவதைப் பொறுத்தே எமது நிலைப்பாடு அமையும் என்ற முடிவை நாம் ஏற்கனவே எடுத்துள்ளோம் என்பதை நான், வடக்கு – கிழக்கு மக்கள் மனு சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவுக்கு எடுத்துக் கூறினேன்.

ஈழத்தமிழ் சகோதரர்களின் குறைந்த பட்ச அபிலாஷைகளை நடைமுறைச் சாத்தியமான முறையில் விட்டுக்கொடுக்காமல் முன்னெடுக்கும் வடக்கு – கிழக்கின் மக்கள் மனு சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயார் எனவும் நான் உறுதி அளித்தேன்.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.