Saturday, April 27, 2024

Latest Posts

இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வையுங்கள்! – ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சிறீதரன் வேண்டுகோள்

“ஜனாதிபதித் தேர்தலில் நிற்பவர்கள் யாராக இருந்தாலும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முன்வையுங்கள். அது பற்றி பரிசீலிப்போம்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் அமரா பெண்கள் ஒன்றியத்தின் மகளிர் தின நிகழ்வு நேற்று (22) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“மகாசக்தி ஆகிய நீங்கள் இந்தப் பிரபஞ்சத்தை வெற்றி கொண்ட பெண்களாக மாறியுள்ளீர்கள். 2009 இற்கு முன்னர் ஆயுதப் போராட்டம் நடந்தபோது ஒரு பெருந்தலைவனுக்குக் கீழ் மிகப்பெரும் விடுதலைப் போரிலே ஒவ்வொரு பெண்ணினதும் தனித்துவமான ஆளுமை எல்லாத் துறைகளிலும் சம பங்காளிகளாக வந்துள்ளதை வரலாறு நிரூபித்திருக்கின்றது.

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் போதை வஸ்து என்ற அரக்கன் இந்தப் பெண்கள் மீதான வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது.

இவ்வாறான சீரழிவுகளுக்குள் தலைநிமிர்ந்து வாழுகின்ற இந்தக் காலகட்டத்தில் பெண்கள் மீதான மறைமுகமான சில வன்முறைகள் இப்போதும் இடம்பெறுகின்றன.

நாடாளுமன்றத்தில் கூட பெண்கள் மீதான வன்முறைகள் இடம்பெற்று இருக்கின்றன என்பது ஊடகங்கள் ஊடாகச்  செய்திகளாக வெளியாகி இருக்கின்றன.

இப்போது ஜனாதிபதித் தேர்தல் பற்றியும் பேசப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு வேட்பாளர் கூட இந்த மண்டபத்தில் ஒரு கூட்டத்தை நடத்திச் சென்றிருக்கின்றார். நீண்ட நெடுங்காலமாகக் கடந்த எட்டு சகாப்தங்களுக்கு மேலாக உறுதி தளராது – தனது கொள்கை தளராது இனத்தினுடைய அடிப்படைக் கொள்கைகளை அடிநாதமாகக் கொண்டு தமிழினம் பயணித்து வருகின்றது.

இவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் யாராக இருந்தாலும் இனப்பிச்சனைக்கான ஒரு தீர்வை முன்வையுங்கள். நாங்கள் அது பற்றி பரிசீலிப்போம். தமிழர்கள் பொது வேட்பாளர் பற்றிய சிந்தனையையும் கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வை எட்டுவதற்காகத் தமிழ் வாக்காளர்கள் ஒன்றுதிரண்டு ஒரு தமிழ் பொது வேட்பாளரை தீர்மானிக்க முனைந்தால் தென்பகுதியில் இருந்து எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் வெல்ல முடியாத மிகப் பெரும் சங்கடத்தைக் கொடுக்கும். அது பற்றி கூட தமிழர் தரப்பு மிக நுணுக்கமாக ஆராய்கின்றது.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.