ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இடம்பெற்ற தாக்குதலில் 60 பேர் பலி

0
64

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த அரங்கில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும் அதன் நம்பகத்தன்மை இன்னும் அரசுத் தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை.

ரஷ்யாவில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புதின் அமோக வெற்றி பெற்றார். 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடர்ச்சியாக 3வது முறையாக ஜனாதிபதியாகி ஸ்டாலினின் சாதனையை முறியடித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த கோரத் தாக்குதல் நடந்துள்ளது. ரஷ்யாவில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக இது அறியப்படுகிறது.

மாஸ்கோவின் மேற்குப் பகுதியில் உள்ள க்ரோகஸ் நகரின் மையத்தில் உள்ள 6200 பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட இசையரங்கில்தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

சம்பவத்தின் போது அங்கு ரஷ்ய பேண்ட் இசைக் குழுவான ‘பிக்னிக்’ குழுவின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென துப்பாக்கிக் குண்டுகள் பாய பலர் சரிந்து விழுந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியது மட்டுமல்லாது அரங்குக்கு பயங்கரவாதிகள் தீவைத்தும் சென்றனர். உடனடியாக தகவலறிந்த காவல், தீயணைப்பு, பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். இந்த சம்பவத்தில் இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here