“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான உண்மைகள் உங்களுக்குத் தெரிந்தால், தயவு செய்து அதனை உடனே வெளிப்படுத்துங்கள்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 131 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் அம்பந்தோட்டை, லுனுகம்வெஹர அபயபுர கனிஷ்ட வித்தியாலயத்துக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (24) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்தியவர்கள் தொடர்பில் தனக்கு உண்மை தெரியும் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த வெறுக்கத்தக்க பயங்கரவாதச் செயலுக்குக் காரணமானவர்கள் யார் என்பதை அறிய நான் உட்பட 220 இலட்சம் மக்கள் காத்திருக்கும் நிலையில், இனியும் காத்திருக்காமல் உயிர்த் தியாகம் செய்த அப்பாவி மக்களுக்காக உண்மையை வெளிப்படுத்துமாறு மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் வெளிப்படையான, பாரபட்சமற்ற மற்றும் உண்மையை வெளிப்படுத்தும், தேசிய சர்வதேச பங்குதாரர்களை ஈடுபடுத்திக் கொண்ட விசாரணை ஊடாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்போம்.” – என்றார்.