Wednesday, August 17, 2022
spot_img

Latest Posts

சுமந்திரன் மீது அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை கடும் குற்றச்சாட்டு

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009 மே மாதம் முடிவடைந்த போதிலும், தமிழர்கள் நிலங்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பானது தொடர்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லாத படியால் இலங்கையில் பாதுகாப்பு செலவினம் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இதற்கு மாறாக, இலங்கையின் பாதுகாப்புச் செலவினங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதுடன், அரசாங்கச் செலவுகளில் 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போரின் போது, 2009ல் 100,000 சிப்பாய்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இது 300,000 க்கு மேல் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்குச் சொந்தமான வளமான காணிகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து, இராணுவ முகாம்கள் தமிழர் பிரதேசங்களில் வேரூன்றியுள்ளன. தமிழர் பிரதேசங்களில் நிலவும் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் சிங்கள இராணுவம் கட்டுப்படுத்துகிறது. இன்று இலங்கையில் கள்ளச்சந்தை, பணவீக்கம் மற்றும் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன. இலங்கை இராணுவம் வணிக முயற்சிகள், நிர்மாண ஒப்பந்தங்கள், சிவில் நிர்வாகம் மற்றும் விவசாயத்தை கட்டுப்படுத்துகிறது. இராணுவத்தின் சிவில் நிர்வாகத் தலையீட்டால் 3.5 மில்லியனுக்கும் அதிகமான தமிழ் மக்களை பாரிய இராணுவ மயப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பின் கீழ் தமிழர்களை நிரந்தரமாக வறுமையில் வைத்திருக்கிறது.

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அவர்களின் உரிய அரசியல் உரிமைகளை வழங்குவதை விட அவர்களின் வாழ்வாதரத்திற்காக போராட வைத்து அவர்களை வறுமையில் வைத்திருக்கிறது! நீண்ட கால தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு உண்மையாகவும் இதயசுத்தியுடனும் தீர்வுகண்டிருந்தால் இலங்கை தற்போதைய பாரதூரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்காது.

இந்தப் பின்னணியில், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு எந்தவொரு கணிசமான தீர்வையும் பெறாமல் இலங்கையின் ஊழல் நிறைந்த அரசாங்கத்தை தொடர்ந்தும் பிணை எடுப்பதைத் தவிர்க்குமாறு புலம்பெயர் அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கேட்டுக்கொள்கின்றன. துரதிஸ்டவசமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய அரசியல் கட்சிகளும் புலம்பெயர் அமைப்புக்களின் வேண்டுகோளை உதாசீனப்படுத்துவதுடன் தமது சொந்த இலாபங்களுக்காக ஒரு ஊழல் நிறைந்த ஆட்சிக்கு தொடர்ந்தும் முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கத்தை கையாள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற எமது அழைப்புக்களை அலட்சியம் செய்யும் திரு.சுமந்திரன் இலங்கை அரசாங்கத்திற்கும் புலம்பெயர்ந்த அமைப்புக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக சேவையாற்றுவதாகக் கூறிக் கொண்டமை குறித்து நாங்கள் திகைப்படைந்தோம்.

திரு.சுமந்திரன் தனது அண்மைய உலகளாவிய விஜயத்தின் போது புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் அவமானப்பட்டதை மறந்துவிட்டார் போலும். புலம்பெயர் தமிழர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் கூட்ட அரங்குகளில் இருந்து பின்வாசல் வழியாக இரகசியமாகத் தப்பிச் சென்றார். திரு.சுமந்திரன் அவர்களின் மக்கள் விரோதப்போக்கின் அடிப்படையில், இலங்கை அரசாங்கத்திற்கு அவர் வழங்கிய முன்மொழிவானது இவரால் செயற்படுத்த முடியாத விடயமாகும்.

1956, 1958, 1962, 1974, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளிலும் அதனைத் தொடர்ந்து 30 ஆண்டுகால யுத்தத்திலும் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைகள் காரணமாக 1.5 மில்லியனுக்கும் அதிகமான தமிழர்கள் புலம்பெயர்ந்து இலங்கைத் தீவை விட்டு வெளியேறினர். தமிழர்களுக்குச் சொந்தமான பல பில்வியன் டொலர் பெறுமதியான தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் சிங்கள அரசாலும் பௌத்த பிக்குகளாலும் ஏவிவிடப்பட்டு சிங்களக் காடையர்களாலும் சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் அழித்துச் சாம்பலாக்கப்பட்டது.

சிங்களக் காடைளர்களால் அப்பாவி தமிழ் பொதுமக்கள் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என வித்தயாசம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர். உக்ரேனில் தற்போது நடைபெறும் யுத்தத்துடன் ஒப்பிடுகையில், தமிழர்கள் மீதான படுகொலைகள் அவர்களின் சனத்தொகை விகிதாசாரத்தில் மிகவும் மோசமானவையாகும். சிங்களத் தலைமைகள் தொடர்ந்தும் குற்றவாளிகளைப் பாதுகாத்து வருவதால் எவரும் இன்றுவரை நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் மேற்குநாட்டு சக்திகளால் இலங்கைத் தீவில் காலூன்றுவதற்காக இலங்கை அரசின் பெரும் கடன்சுமையில் இருந்து பிணையெடுக்க எந்த விதமான முன்நிபந்தனைகளும் இன்றி முயல்கின்றன, அதே நேரம் தமிழர்களுக்கு எதிரான இன்னுமொரு இனப்படுகொலை மீண்டும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்தப் பின்னணியில், ஒரு தோல்வியுற்ற அரசை பிணை எடுப்பதற்காக புலம்பெயர் தமிழர்களுடன் தான் ஒரு பாலமாக சேவையாற்றுவதாகக் கூறிக்கொள்ளும் துணிச்சலை திரு.சுமந்திரன் அவர்களுக்கு புலத்தில் வாழும் ஒருசில அடிவருடிகளா கொடுத்தார்கள்?

சிங்கள இனவாதிகளின் ஏழு தசாப்த கால போலித்தனமான வரலாற்று அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒரு உண்மையான நம்பகமான மூன்றாம் தரப்பினரின் பிரசன்னம் இல்லாமல் இலங்கை அரசாங்கத்துடன் எந்தவிதமான பேச்சுகளிலும் ஈடுபடமாட்டார்கள். 2002 சமாதானப் பேச்சுவார்த்தைகளின் அனுபவங்களின் அடிப்படையில், புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்னுமொரு ‘சமாதானப் பொறிக்குள்’ விழத் தயாராக இல்லை!

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.