இம்ரான் கான் சிறை தண்டனை நிறுத்திவைப்பு!

0
118

தோஷகானா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறைத்தண்டனையை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இம்ரான் கான், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். அந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடமிருந்து பெற்ற பரிசுகளை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று சொத்து சேர்த்து ஊழலில் ஈடுபட்டதாக இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி மீது குற்றச்சாட்டு எழுந்தது. பரிசுப்பொருட்களை அரசு கருவூலமான தோஷகானா என்ற துறையில் ஒப்படைக்காமல் ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதேபோல், அரசின் ரகசியங்களை கசியவிட்டதாகவும், பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வன்முறையை தூண்டியதாகவும் இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், இம்ரான்கான் கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, பிரதமராக இருந்தபோது அரசின் ரகசியங்களை கசியவிட்டதாக பதியப்பட்ட வழக்கில் இம்ரான்கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனிடையே, இம்ரான்கான் மற்றும் அவரது மனைவிக்கு எதிரான தோஷகானா பரிசுப்பொருள் ஊழல் வழக்கு கோர்ட்டில் கடந்த ஜன. 31-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் இம்ரான்கானும் அவரது மனைவி புஷ்ரா பிபியும் குற்றவாளிகள் என கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகள் இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தண்டனை விதிக்கப்பட்ட இம்ரான்கான் அவரது மனைவி, 10 ஆண்டுகளுக்கு அரசு பதவிகள் வகிக்கவும் தடைவிதிக்கப்பட்டது.

மேலும், இருவருக்கும் 787 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் அவலம் அரசு ரகசியங்களை கசியவிட்டதாக இம்ரான்கான் ஏற்கனவே 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார். பரிசுப்பொருள் ஊழல் வழக்கில் மேலும் 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

இதனிடையே, இம்ரான்கான் சார்பில் தண்டனையை நிறுத்தி வைக்கும்படி, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (ஏப். 1) விசாரணைக்கு வந்த தோஷகானா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறைத்தண்டனையை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. ரம்ஜான் விடுமுறைக்கு பின் வழக்கில் விசாரணை நடத்தி முடிவெடுக்கும் வரை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here