தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்கித் தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிக்க முயலாதீர்கள்!

0
142

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரைப் போட்டியிட வைத்து தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கத் தமிழ்க் கட்சிகள் முயற்சிக்கக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.

தெற்கில் ஜனாதிபதித் தேர்தல் விவகாரமும், வடக்கில் தமிழ் பொதுவேட்பாளர் விவகாரமும் தற்போது சூடுபிடித்துள்ளன. இது தொடர்பில் வஜிர அபேவர்தன எம்.பி. கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தியே தீருவார். அவர் மூவின மக்களின் ஆதரவுடன் அந்தத் தேர்தலில் வெற்றியடைந்து ஜனாதிபதிப் பதவியில் தொடர்ந்து நீடிப்பார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்கத் தமிழ்க் கட்சிகள் ஆலோசிக்கின்றனர். வடக்கிலுள்ள சில தமிழ்க் கட்சிகள்தான் இதில் ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழ் பொதுவேட்பாளராக யார் களமிறங்கினாலும் அவர் வெற்றியடையமாட்டார் என்பதைத் தமிழ்க் கட்சிகள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எனினும், தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை வடக்கிலுள்ள தமிழ்க் கட்சிகள் களமிறக்கினால் அங்குள்ள மக்களின் வாக்குகள்தான் சிதறடிக்கப்படும். எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரைப் போட்டியிட வைத்து தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கத் தமிழ்க் கட்சிகள் முயற்சிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here