வெடுக்குநாறிமலை விவகாரம் – அரை நிர்வாணமாக்கப்பட்டமை குறித்தும் கஜேந்திரன் விசனம்

0
45

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸாரால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்தார்.

இதன்போது, கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர்,

“மஹா சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளில் கலந்து கொள்வதற்காக வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்ற போது பொலிஸாரால் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

ஆலயத்திற்கு செல்ல விடாது தடுத்து நிறுத்தப்பட்டோம். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் பிரசன்னமாகியிருந்தார்.

வழிபாடுகளுக்கு செல்ல அனுமதிக்குமாறு பொலிஸாரிடம் கோரிய போதிலும் அவர்கள் அதனை மறுத்தார்கள். நீதிமன்ற தடையுத்தரவை காண்பிக்குமாறு கோரினோம்.

நீதிமன்ற தடையுத்தரவு இல்லையெனினும் அனுமதிக்க முடியாது என கூறினார்கள். அரசியலைப்பின் படி, மத சுதந்திரத்தை தடை செய்வது சட்டவிரோத செயல் என சுட்டிக்காட்டி பொதுமக்களுடன் ஆலயத்தை நோக்கி கால் நடையாக பயணித்தோம்.

சிரமத்திற்கு மத்தியில் ஆலயத்தை அடைந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த போது பொலிஸார் காலணிகளுடன் ஆலயத்திற்குள் நுழைந்து ஆலய விக்கிரகங்கள் மற்றும் பூஜைப் பொருட்களை சேதப்படுத்தி பக்தர்களையும் அச்சுறுத்தி வெளியேறுவதற்கு நிர்பந்தித்தார்கள்.

மேலும் தாக்குதல் மேற்கொண்டு தாம் உட்பட 8 பேரை கைது செய்தனர். தன்னுடைய உத்தியோகப்பூர்வ செயலாளர் இலக்கு வைக்கப்பட்டு அரை நிர்வாணமாக்கப்பட்டார்.

அரசியல் நோக்கங்ளுக்காக உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதற்காக இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

தன்னுடன் இணைந்து பணியாற்றுவபர்களுக்கும் சுதந்திரமாக அரசியலில் ஈடுபட முடியாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என சபையில் தெரிவித்தார்.

சட்டவிரோத கைது மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என செல்வராசா கஜேந்திரன் சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here