கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தால் அத்துமீறி பறிக்கப்பட்டு அநீதிகள் இழைக்கப்படுவதை எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதிகோரி போராட்டம் 11 ஆவது நாளாக வியாழக்கிழமை (04) இன்றும் தொடர்கிறது.
இதற்கு ஆதரவு தெரிவித்து நற்பிட்டிமுனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து பொதுமக்களுடன் இணைந்து நடைபவணியாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்னால் உள்ள போராட்ட இடத்தினை வந்தடைந்தனர்.
இதன் போது அமைச்சரவை தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துங்கள், கல்முனை உப பிரதேச அலுவலகமாக கருதி மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத தீர்மானங்கள் அனைத்தையும் இரத்து செய்யுங்கள், காணி நிதி அதிகாரங்களை வழங்குங்கள், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சுயாதீன தொழிற்பாட்டை உறுதிப்படுத்துங்கள் என பல்வேறு கோஷங்களை முன்வைத்து போராடுகின்றனர்.
இந்த போராட்டத்தில் பொதுமக்கள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.