ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு நாடாளுமன்றத்தினால் கோரிக்கை விடுக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுப்படுத்த ஜனாதிபதியை பதவி விலகுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றம் தலையிட வேண்டும் என கோரியது.
எவ்வாறாயினும், ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோருவதற்கு நாடாளுமன்றத்திற்கு எந்தவொரு ஜனநாயக உரிமையும் கிடையாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடியை ஜனநாயக வழிகளில் தீர்க்க வேண்டும் என்றும் ஜனாதிபதியை தெரிவு செய்த மக்களே அது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சிகள் ஒன்றிணைந்து தீர்வை உருவாக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தபோதும் இடைக்கால அரசாங்கத்திற்காக அரசாங்கத்துடன் கைகோர்க்க எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்துவிட்டன.
இதற்கிடையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்து பேர் உட்பட 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்ததை அடுத்து அரசாங்கத்தின் நாடாளுமன்ற பெரும்பான்மை ஆட்டம் கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.