புத்தாண்டு சுபவேளை பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கான சுபவேளை குறிப்புப் பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பிரதாய முறைப்படி இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச சுபநேர கணிப்புக் குழுவினால் தயாரிக்கப்பட்ட சுபவேளை குறிப்புப் பத்திரமே இவ்வாறு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார்.
புத்தாண்டு பிறப்பு, புண்ணிய காலம், உணவு சமைத்தல், அடுப்பு பற்றவைத்தல், உணவு உண்ணல், தலைக்கு எண்ணெய் தேய்த்தல், புத்தாண்டில் வேலைக்குப் புறப்பட்டு செல்லுதல் உள்ளிட்ட சுப காரியங்களுக்கான சுப நேரங்கள் மேற்படி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.