நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் கௌரவ சபாநாயகரின் அறிவித்தல் எமது நாட்டில் தற்பொழுது நிலவும் நெருக்கடியான நிலைக்கு பாராளுமன்றத்தின் ஊடாக குறுகியகால மற்றும் நீண்டகால தீர்வுகளை வழங்கும் நோக்கில் 2022 ஏப்ரல் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பாராளுமன்ற விவாதங்களில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அவை தொடர்பில் ஒரு சாதகமான தீர்வை எட்ட முடியாமல் போனதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனினும், இது தொடர்பில் சில சாதகமான நடவடிக்கைளை எடுக்கும் நோக்கில் ஒன்பதாவது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு உறுப்பினர்களின் பங்கேற்புடன் 2022 ஏப்ரல் 05 மற்றும் 08 ஆம் திகதிகளில் எனது தலைமையில் மேலும் கலந்துரையாடியதை குறிப்பிட விரும்புகிறேன்.
அதற்கமைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு உறுப்பினர்கள் நேற்று அதாவது 2022 ஏப்ரல் 18 ஆம் திகதி மீண்டும் பாராளுமன்றத்தில் கூடி நெருக்கடி நிலைமை தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்கு நான் நடவடிக்கை எடுத்தேன்.இதன்போது, தற்பொழுது பொதுமக்கள் மத்தியில் காணப்படும் அமைதியின்மைக்கு நீண்ட கால தீர்வாக புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கும், குறுகியகால மற்றும் துரிதமாக எடுக்கப்படவேண்டிய தீர்வுகளாக கடந்த காலங்களில் பின்னடைந்திருந்த பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பலப்படுத்தும் என்ற காலத்தின் தேவையை அடிப்படையாகக் கொண்டு 21 வது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தின் ஊடாக முறையாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கட்சித் தலைவர்கள் பலர் கருத்துத் தெரிவித்ததை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த நெருக்கடியான நிலையில் பொதுமக்கள் எதிர்பார்க்கும் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியுமான சில சாதகமான முன்மொழிவுகள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை கணக்காய்வாளர் நாயகத்தின் மேற்பார்வைக்கு உட்படுத்துவதற்கு ஏற்ற வகையில் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தைத் திருத்தல், கணக்காய்வாளர் நாயகத்துக்கு அரசியல் கட்சிகளைக் கணக்காய்வுக்கு உட்படுத்துவதற்கு ஏற்ற வகையில் திருத்தங்களை மேற்கொள்ளல், அரசாங்கத்தின் ஒப்பந்தங்களுக்கு கேள்விப்பத்திரங்கள் இன்றி பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதைத் தடுத்தல் மற்றும் அரசாங்க ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான திருத்தம், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அல்லது அரசாங்க ஊழியர்களினால் சட்டவிரோதமாகச் சம்பாதித்த வெளிநாட்டு வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் வைப்பிலிடப்பட்டிருப்பதாக வெளியாகும் சொத்துக்களை அரசுடமையாக்குவது ஏதுவான வகையில் சட்டங்களைத் திருத்தல், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் பாராளுமன்றத்துக்கு மற்றும் ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்படுவதை தடுக்கும் திருத்தம் போன்ற பல்வேறு முன்மொழிவுகள் இங்கு கலந்துரையாடப்பட்டதாக இச்சபையின் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.
அதற்கமைய நாட்டில் தற்பொழுது நிலவும் நெருக்கடி நிலைமையை கட்டுப்படுத்தும் முயற்சியாக பொதுமக்கள் எதிர்பார்க்கும் நலன்களுக்காக முன்னுரிமை வழங்கும் வெளிப்படைத்தன்மை கொண்ட, ஊழலற்ற செயல்திறன்மிக்க ஆட்சிமுறையொன்றை ஏற்படுத்தும் நேர்மையான நோக்கத்துடன் இது தொடர்பில் பாராளுமன்றத்தின் நேரடி தலையீட்டுடன் எதிர்கால நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள இந்தப் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பையும் முழுமையான ஆதரவையும் கட்சி பேதங்களின்றி எமது தாய்நாட்டின் எதிர்காலத்துக்கு தேவையான நடவடிக்கைகளை இனிமேல் மேக்கொள்ள உறுதி செய்ய வேண்டும் என சட்டவாக்கத்தின் சபாநாயகர் என்ற வகையில் நான் மிகப்பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.