உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் உள்ளடக்கங்கள் காரணமாக GSP + வர்த்தக சலுகைகளை இலங்கை இழக்கும் அபாயம் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் துணை நிர்வாக இயக்குனர் பாவ்லா பாம்பலோனி, புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்த கவலைகளை வெளிப்படுத்தி உள்ளத்துடன் வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளதாக அரசாங்கத்தின் தகவலறிந்த வட்டாரங்களில் அறிய முடிகிறது.
புதிய சட்டமூலத்தின் உள்ளடக்கம் தொடர்பில் அமெரிக்கா தனது அதிருப்தியை வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்கவிடம் தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டமூலம் மாற்றப்படாவிட்டால், வர்த்தக உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவிடம் இங்கிலாந்து அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் சில பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க ஆகியோருடன் கடந்தவாரம் கொழும்பில் நடத்தியுள்ள சந்திப்பில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜிஎஸ்பி + வரி சலுகைகள் தொடர்பான முடிவுகளில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் உள்ளடக்கம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் இலங்கையில் உள்ள சிவில் சமூக அமைப்புகள், எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. PTA ஐ விட புதிய சட்டம் மிகவும் கொடூரமானதாக உள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
N.S