அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம் (ACBHCA) விருந்துகள், திருமண மண்டபங்கள் மற்றும் கேட்டரிங் கட்டணங்களை 40% உயர்த்த உள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள தாங்க முடியாத பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மைக்காலமாக எரிபொருள் விலையேற்றம் என்பனவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அதுல களுஆராச்சி டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.
“பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஒரு தட்டு சாப்பாட்டின் விலையையும் பஃபே சேவையையும் நேரடியாக பாதித்துள்ளது. இந்த நெருக்கடியால், குறைந்த பட்ஜெட்டில் உணவை வழங்குவது சாத்தியமில்லை,” என்று அவர் கூறினார்.
எனவே, ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட அரங்குகளுக்கு 20% மற்றும் புதிய முன்பதிவுகளுக்கு 40% விலையை உயர்த்துமாறு அனைத்து விருந்து மண்டபம் மற்றும் கேட்டரிங் உரிமையாளர்களிடம் தலைவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், பலமடங்கு விலைகள் உயர்ந்துள்ள நேரத்தில், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குமாறு, விருந்துகள், திருமண மண்டபங்கள் மற்றும் கேட்டரிங் உரிமையாளர்களிடம் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.