சிறிலங்காவில் எவ்வகை மாற்றம் நிகழ்தாலும் தமிழர் தேசத்தின் மீதான அபகரிப்பு நீங்காது என்பதனையே மூதூர் சம்பவம் வெளிக்காட்டுவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஈழத்தமிழர்களின் பண்டைய அடையாளங்களில் ஒன்றாக திருகோணமலை மூதூர் 64ம் கட்டையில் உள்ள இராஜவந்தான் மலையில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் அழிக்கப்பட்டு வருவதோடு பௌத்த சின்னங்களை நிறுவுவதற்கான வேலைப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 23) தமிழ்மக்கள் மற்றும் சைவ குருமார்கள் பண்டைய வழிபாட்டு தளத்திற்கு சென்ற போது, பௌத்த பிக்கு ஒருவர் காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் சகதிம் அவர்களை தடுத்து நிறுத்தி அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கருத்தினை வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு, சிறிலங்காவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக தென்னிலங்கையில் போராட்டங்கள் இடம்பெற்று வருவதோடு, ஆட்சி மாற்றம், அமைச்சரவை மாற்றம், அரசியலமைப்பு மாற்றம், 21ம் திருத்தச்சட்டம் என பல மாற்றங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தமிழர் தாயக மக்களையும் தென்னிலங்கை போராட்டத்தோடு பயணிக்குமாறு அழைப்புக்கள் விடுக்கப்பட்ட போதும், தமிழ்மக்கள் மௌனமான முறையில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந் நிலையில் மூதூர் சம்பவமானது, பொருளாதார நெருக்கடியினால் சிக்குண்டுள்ள தென்னிலங்கை, அதில் இருந்து மீளுவதற்கு பல மாற்றங்களை முன்வைத்திருந்தாலும், அதன் அரச இயந்திரம் (கட்டமைப்பு) தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பு, அபகரிப்பு ஓயாது என்பதையே வெளிக்காட்டுகின்றது.
தொல்பொருள் செயலணி, வனஜீவராசிகள் இலக்கா என தனது பல்வேறு திணைக்களங்கள் ஊடாக தமிழர் தாயகத்தின் மீதான பௌத்த மயமாக்கல், சிங்கள மயமாக்கல் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, இதற்கு துணையாக தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்து நிற்கின்ற இராணுவமே இருக்கின்றது.
பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள சிங்கள தேசம், இதற்கு முதன்மைக் காரணமாக உள்ள தனது இராணுவச் செலவீனங்கள் பற்றி மூடிமறைத்து, தனது ஆக்கிரமிப்பு இராணுவத்தை கட்டிக்காத்து, தொடர்ந்தும் தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பையும், கட்டமைப்புசார் இனஅழிப்பையும் மேற்கொள்ளவே என்பது மூதூர் சம்பவத்தின் ஊடாக மீண்டும் வெளிப்படுகின்றது என தெரவிக்கப்பட்டுள்ளது.