வரி விதித்து மக்களை ஒடுக்கும் ஊழல் அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் கூட்டணி உறுப்பினர்கள் கைகோர்க்க மாட்டார்கள். திருட்டு, ஏமாற்று, ஊழல் பேர்வழி தீயவர்களுடன் எந்த சூழ்நிலையிலும் தாம் கைகோர்க்க மாட்டோம். இந்த நாட்டை குடும்ப ஆட்சியின் கீழ் நடத்துவதற்கு எதிர்க்கட்சி ஆதரவு கிடைக்காது என எதிர்கட்சித் தலைவர் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மேலும், இந்த நாட்டிலிருந்து டொலர்கள், வளங்கள் மற்றும் அரச வளங்களை கொள்ளையடித்த பண்டோரா பேப்பர்கள் மூலம் தெரியவந்த டொலர் திருட்டில் ஈடுபட்ட அனைவரும் இந்த நாட்டினரோ, உலகில் எந்த நாட்டினரோ என்ற பாகுபாடின்றி, எமது நாட்டின் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டு திருடப்பட்ட பணம் நாட்டுக்கு கொண்டுவரப்படும். வரி மீதான வரி விதிப்பு நிறுத்தப்பட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி தற்போதைய அரசாங்கத்துடன் இணையும் என ஜனாதிபதி நினைத்தால் அது வெறும் ஆசையே எனவும், நாட்டை அழித்த ராஜபக்சவுடன் தனக்கும் தமது கட்சிக்கும் தொடர்பில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்கள் மீது வரி விதிப்பதாகப் பேசும் தற்போதைய அரசாங்கம், பண்டோராவின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பணத்தையும் வளங்களையும் எவ்வாறு நம் நாட்டிற்கு திரும்பப் பெறுவது என்பதில் கவனம் செலுத்தவில்லை, ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இழந்த வளங்களை மீட்பதற்கான சட்டமும் அதிகாரமும் அமுல்படுத்தப்படும். பணம் நாட்டிற்கு திருப்பித் தரப்படும் என்றார்.
அத்துடன், அரசாங்கம் முன்வைத்துள்ள ஊழல் ஒழிப்பு சட்டமூலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட போதிலும், கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் போன்ற நிதி மோசடிகள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அதில் குறிப்பிடப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது நல்ல விடயம் என்றாலும் அவர்கள் செய்து கொண்ட உடன்படிக்கைகள் தவறானவை எனவும் அதில் மக்களை பாதிக்கும் விடயங்கள் உள்ளடங்கியிருப்பதால் அவை திருத்தப்பட வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் டீல் செய்வது நாட்டுக்கு வெற்றிகளை பெற்றுத் தரவேண்டுமே தவிர நாட்டை மேலும் படுகுழியில் இட்டுச்செல்ல கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வதன் அவசியத்தை தானும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான குழுவும் தொடர்ச்சியாக வெளிப்படுத்திய போதும் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு அரசாங்கம் அதனை முற்றாக நிராகரித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.