உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் தாங்கள் போட்டியிடும் உள்ளூராட்சி அதிகார சபைக்கு வெளியில் கடமைக்குச் சமூகமளிக்கும் சுற்றறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக தேர்தலை இரத்துச் செய்யாத காரணத்தினால் தேர்தல் சட்டங்கள் மீறப்படாமல் இருக்க வேண்டும்.
தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் போட்டியிடும் உள்ளுராட்சி அதிகார சபைக்கு வெளியில் அவர்களை மீள இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தலில் போட்டியிடும் சில அரச ஊழியர்களுக்கு இன்னும் அடிப்படை சம்பளம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் சம்பளம் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும் சில நிறுவனங்களின் தலைவர்கள் அமைச்சரவை தீர்மானத்தை முறையாக அமுல்படுத்தவில்லை என தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் சில அரச ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை என முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
N.S