Sunday, September 8, 2024

Latest Posts

பொருளாதார நெருக்கடிகளால் வேலைக்கு அமர்த்தப்படும் சிறுவர்கள்!

“எங்கள் வவுனிக்குள கிராமம் மிக அழகானது. எனது நண்பிகளுடன் தினமும் ஆசை ஆசையாய் கல்விகற்க பாடசாலைக்குச் செல்வேன். ஆங்கிலப்பாடம் எனக்கு மிகவும் விருப்பமான பாடம். வகுப்பாசிரியை உன் கனவு என்ன? என கேட்கும்போதெல்லாம் ஓர் ஆசிரியையாக வரவேண்டும் என்றே கூறுவேன். உண்மையில் அதுதான் என் கனவும் இலட்சியமும்கூட. ஆனால், தந்தையின் குடிப்பழக்கத்தாலும் குடும்பத்தின் வறுமையாலும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு என் கனவுகள் கலைந்துவிட்டன. மீண்டும் பள்ளிக்குப் போவேனா என்ற பேராவலுடன் காத்திருக்கிறேன்” – என்று பத்து வயது சிறுமியான மதியரசி அழுதுகொண்டே கூறினாள். 

பாடசாலைக்கு மீண்டும் செல்லும் எதிர்பார்ப்புடன் நாட்களை கடத்தும் மதியரசி

வவுனியா மாவட்டம், வட மாகாணத்தில் இரண்டாவது அதிக சனத்தொகையை கொண்ட மாவட்டமாகும். இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி இங்கு வாழும் நலிவடைந்த மக்களையும் பாதித்துள்ளது. இலங்கையில் கிராமப்புற மக்களே அதிகளவாக இந்த நிலைமைக்கு முகங்கொடுத்துள்ளனர். அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகளால் சுயதொழில் நடவடிக்கைகள், விவசாய நடவடிக்கைள் மற்றும் எந்தவொரு தொழிலையும் முன்னெடுக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேபோன்று குடும்ப தலைவர்களின் மதுபாவனை அதிகரிப்பால் பல குடும்பங்கள் சிதைந்து போயுள்ளன. 

வவுனிக்குளம் கிராமத்தில் குடும்பத் தலைவரின் மதுபாவனையால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் சொந்த வீடு நிலத்தை விட்டு தனது ஐந்து பிள்ளைகளுடன் வெளியேறிய தாய்தான் வாசுகி. தான் உழைக்கும் அன்றாட பணத்தை தனது கணவனின் மதுபாவனைக்கு கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் தொடர்ச்சியாக அவளுக்கு ஏற்பட்டதால் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் அவர்களது கல்வியையும் கருத்திற்கொண்டு வாசுகி தாண்டிக்குளத்தில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினாள். 

“என் கணவனின் குடிப்பழக்கத்தால் கடந்த 23 வருடங்களாக நான் நிம்மதியில்லாத வாழ்க்கையையே வாழ்கிறேன். எனக்கு இரண்டு ஆண் மற்றும் மூன்று பெண் பிள்ளைகள். கணவனைப் பார்த்து மூத்த மகனும், மூன்றாவது மகனும் மதுவுக்கு அடிமையாகி எங்களைவிட்டு பிரிந்து வாழ்கின்றனர். மூத்தவனுக்கு அடுத்தவள் என் மகள் தயாராணி. மகன்மார் மதுவுக்கு அடிமையானதால் 16 வயதுமிக்க மூத்தவனுக்கு அடுத்தவளான மகளை கொழும்புக்கு பணிக்கு அனுப்பினேன். நான்காவது எனது பெண் பிள்ளை மாத்திரமே கல்வி கற்கிறாள். குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியால் கடைசியாக பிறந்த மதியரசியின் ஆசிரியர் கனவையும் கலைத்துவிட்டேன்.” – என தன் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினாள் வாசுகி.  

வாசுகியும், மதியரசியும் 

வவுனியா மாவட்டத்தில் நலிவடைந்த குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி மற்றும் மதுவுக்கு அடிமையாகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வாசுகியின் குடும்பத்தை போல எத்தனையோ குடும்பகளில் வாழும் பிள்ளைகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. இவர்களின் ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்களின் பிள்ளைகளின் கல்வி குறித்து சிந்திக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பிள்ளைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள அரச நிறுவனங்களின் உதவிகளையும், முறையான பொருளாதாரத் திட்டங்களையும் எதிர்பார்க்கின்றனர். 

தொழிலுக்கு அமர்த்தப்படும் சிறுவர்கள்

“இலங்கையில் நகரப்புறங்களில் வாழும் மக்களே ஓரளவு வசதி வாய்ப்புடன் வாழ்க்கின்றனர். ஆனால், கிராமப்புறங்களில் வாழும் மக்கள் பொருளாதார நெக்கடிகளால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வவுனியா வடக்கு, தெற்கு கல்வி வலயங்களுக்குட்பட்ட கிராமங்களில் பல சிறுவர்களின் கல்வி இடைநிறுத்தப்பட்டு பண்ணைகளிலும் நகர்ப்புற கடைகளிலும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்” – என வவுனியா வலயக்கல்;வி பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் இராஜரத்தினம் கூறுகிறார்.  

கடை ஒன்றில் பணிபுரியும் தவசீலன்

வவுனியா வடக்குப் பகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் 95  மாணவர்களும் தெற்கு பகுதியில் 298 பேரும் தமது கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தி தொழில்களுக்குச் சென்றுள்ளனர். மாணவர்களின் இடைவிலகல்கள் தொடர்ச்சியான அதிகரிப்பையே காட்டுவதால் செட்டிக்குளம் மற்றும் சிங்கள பிரதேசங்களில் மாணவர்களின் இடைவிலகல்கள் குறித்த கண்காணிப்பு ஆய்வுகளை நடத்த மாவட்ட சிறுவர் பாதுகாப்பு குழு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழ் பகுதிகளைவிட சிங்கள கிராமங்களில் இடைவிலகல் அதிகமாக உள்ளதாக மடுகந்த பாடசாலையின் ஆசிரியர் ரஞ்சன் ரணில் ஹேமசிறி கூறுகிறார். 

சிறுவர்கள் தொழிலுக்குச் செல்லும்போக்கு கிராமப்புறங்களில் அதிகரிப்பு

கை வளையல்களை விற்பனை செய்யும் அகிலேஸ்

“வடக்கு மாகாணத்தில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதாக எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகுவதில்லை. ஆனால், நாம் கண்காணிப்பு விஜயங்களை மேற்கொள்ளும்போது செட்டிக்குளம், ஆரியகுளம், பட்டிக்குடியிருப்பு, பெரிய தம்பனை உட்பட பல கிராமங்களில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது’’ என வவுனியா மாவட்ட செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி நந்தசீலன் கூறுகிறார். 

வட மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவது குறித்து விரைவான ஆய்வுகளை துறைசார் அரச நிறுவனங்கள் நடத்த வேண்டுமென்பதுடன் பாடசாலை இடைவிலகல்கள் குறித்து கிராமபுற பாடசாலை நிர்வாகங்களும் பெற்றோரும் தீவிர அவதானம் செலுத்த வேண்டும் என்பதும் களஆய்வுகளில் தெளிவாகிறது.

நகர்ப்புற பாடசாலைகளில் மாணவர்களின் இடைவிலகல் மிகவும் அரிதென வவுனியா மத்திய தமிழ் மகா வித்தியாலய அதிபர் யோகேஸ்;வரன் தெரிவிக்கிறார். ஆனால், கந்தபுரம் வாணி வித்தியாலயத்தில் ஒவ்வொரு வருடமும்  7 முதல் 8 மாணவர்கள் கல்வியை கைவிட்டுவிட்டு பணிக்குச் செல்கின்றனர் என ஆசிரியர் சற்சொரூபன் கூறுகிறார். 

வடக்கு மாகாணத்தில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவது தொடர்பில் ஓரளவான விழிப்புணர்வு பெற்றோரிடையே உள்ள போதிலும் மத்திய மாகாணத்தில் நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. மத்திய மாகாணத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஓரிரு ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடி உச்சம் தொட்டுள்ளதால் கொழும்பு உட்பட நாட்டின் பிற பாகங்களில்  சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவது கணிமான அளவு அதிகரித்துள்ளது.

சிறுவர்கள் தொழிலுக்குச் செல்வதில் தாக்கம் செலுத்தும் குடும்ப வறுமை 

“2019ஆம் ஆண்டின் பின்னர் நாடு முகங்கொடுத்துவரும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியாத நிலைக்கு அனைத்து மக்களும் தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே வருமானம் குறைவாக உள்ள தொழிலாளர்களுக்கு இதன் தாக்கம் கடும் சுமையாக மாறியுள்ளது. அதனால் மூன்று, நான்கு பிள்ளைகள் உள்ள குடும்பங்கள் ஒருவர் அல்லது இரு பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தி அவர்களை தொழிலுக்கு அமர்த்துகின்றன”- என நுவரெலியா மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஹரேந்திரன் குறிப்பிட்டார். 

இலங்கை எதிர்கொண்டுவரும் மோசமான பொருளாதார சூழலால் நலிவடைந்த குடும்பங்களில் வைத்தியர்களாகவும், ஆசிரியர்களாகவும் சமூகத்தில் மதிப்புமிக்க ஒரு தொழிலை செய்ய வேண்டுமென்ற கனவுடன் வாழ்ந்த பலரின் எதிர்பார்ப்புகள் கலைந்து வருகின்றன.

“சிறுவயது முதலே பொலிஸ் அதிகாரியாகி எங்கள் ஊரில் பணியாற்ற வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. சாதாரண தரத்தில் ஆங்கிலப்பாடத்தை தவிர ஏனைய அனைத்து பாடங்களிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்றேன். ஆனால், குடும்பத்தின் வறுமைநிலை மோசமடைந்ததால் ஹட்டனில் ஒரு வெற்றிலை விற்பனை செய்யும் கடையில் இன்றுநான் தொழில்புரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்” – என கலைக்கமல் உருக்கத்துடன் தனது கதையைக் கூறினார்.  

கொட்டகலை ட்ரைடன் தோட்டத்தில் இரண்டு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்த கலைக்கமல், தந்தையின் மதுப்பழக்கத்தால் தாயை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தால் தனது கனவுகளை தூக்கியெறிந்துவிட்டு கடையில் பணிபுரிகிறார். 

இலங்கை பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள போதிலும் மதுபாவனை சதவீதம் குறையவில்லை. மாறாக அதிகரிப்பையே காட்டுவதாக உலக நாடுகளில் மதுபாவனைகள் குறித்து ஆய்வுகளை நடத்தும் www.statista.com இணையத்தின் தரவுகள்; கூறுகின்றன. 2021ஆம் ஆண்டுமுதல் இலங்கையில் மதுபாவனை சதவீதம் தொடர்ச்சியான அதிகரிப்பு போக்கையே இணையத்தின் ஆய்வுகள் காட்டுகின்றன. இலங்கையில் இரண்டாவதாக அதிக மதுபாவனையாளர்கள் மத்திய மாகாணத்திலேயே உள்ளனர். இங்கு 660 மதுபானசாலைகள் உள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 234 மதுபானசாலைகள் உள்ளதுடன் இவை தோட்டங்களை அண்டிய சிறிய நகரங்களிலேயே அமைந்துள்ளன.


  
மதுபாவனை அதிகரித்துவரும் போக்கை வெளிப்படுத்தும் குறியீட்டு படம்

குடும்பத் தலைவர்களின் மதுபாவனையால்தான் பெருந்தோட்டப்பகுதிகளில் பல மாணவர்கள் கல்வியை கைவிட்டு ஆடை கடைகளிலும், ஹோட்டல்களிலும், கட்டட நிர்மாண பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
 
பொருளாதார நெருக்கடியால் கலையும் கனவுகள்

“எங்கள் ஊரில் பல அண்ணாமார்களும் அக்காமார்களும் ஆசிரியர்களாக பணி புரிகின்றனர். அவர்களை போன்று நானும் ஆசிரியராக வேண்டுமென ஆசைப்பட்டேன். ஆனால், தாய் தலைமையிலான என் குடும்பத்தின் வறுமையை போக்க அன்றாட கூலிக்காக 16 வயதிலேயே மரக்கறி தோட்டத்தில் பணிக்கு வந்துவிட்டேன்” என மஸ்ககெலியா ஸ்டொக்ஹோம் தோட்டத்தை சேர்ந்த காயத்திரியை சந்தித்தபோது கவலையுடன் தெரிவித்தார்.  

மரக்கறி தோட்டத்தில் வேலையில் ஈடுபடும் காயத்திரி

கடந்த 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவது கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக கண்டி சமூக அபிவிருத்தி நிலையம் நடத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கணிசமாக இடைவிலகல்கள் அதிகரித்துள்ளன. மத்திய மாகாணத்தின் ஹட்டன் கல்வி வலயத்தில் மாத்திரம் கடந்த 2021ஆம் ஆண்டு 790 மாணவர்கள் இடைவிலகி தொழில்களுக்குச் சென்றுள்ளனர். இது 2022ஆம் ஆண்டில் மேலும் அதிகமாக இருந்திருக்குமென ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட டின்சினன் பாடசாலை அதிபர் பொன் பிரபா கூறியதுடன் தமது பாடசாலையில் கடந்த (2022) ஆண்டு 20 சதவீதமான மாணவர்கள் கல்வியை கைவிட்டு தொழில்களுக்கு சென்றுள்ளனர் என தெரிவித்தார். 

டிக்கோயா நுண்கலை கல்லூரியில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2023 மார்ச் மாதம்வரையான காலப்பகுதியில் 39 பேர்  குடும்ப வறுமை காரணமாக கல்வியை இடைநிறுத்திவிட்டு கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு தொழிலுக்குச் சென்றுள்ளனர் என அதிபர் என்.மூவேந்தன் தெரிவித்தார். 

தலவாக்கலை கிறேட்வெஸ்;டன் பாடசாலையில் 27 மாணவர்கள் கடந்த இரண்டு வருடங்களில் நகர்புற கடைகளில் பணிக்குச் சென்றுள்ளதாக பாடசாலை ஆசிரியர் கேதீஸ்வரன் கூறியதுடன், ஹட்டன் கார்பெக்ஸ் கல்லூரியில் 2021, 2022ஆம் ஆண்டுகளில் 20 மாணவர்கள்வரை பாடசாலையிலிருந்து இடைவிலகி தொழிலுக்குச் சென்றுள்ளதாக அதிபர் பரசுராமன் சங்கர் தெரிவித்தார்.  

இளம் வயது திருமணங்கள், குடும்பத்தலைவர்களின் போதைப் பாவனை, கொவிட் தொற்று காரணமாக பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டிருந்தமை, பாடசாலைகளை அண்டி உருவாகியுள்ள போதைப்பொருள் வலைப்பின்னல், அதிகரித்துள்ள பொருளாதார சுமைகள் உள்ளிட்ட காரணங்களால் சாதாரண தரக் கல்வியைகூட கற்றுக்கொள்ள முடியாது நிலைக்கு இலங்கையில் வறுமையான மற்றும் நலிவடைந்த குடும்பங்களில் வாழும் சிறுவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரியும் ரிம்ஷான்

“எமது தோட்டத்தில் அண்மையில் நடத்திய ஆய்வில், தாய்மார்கள் வெளிநாடு செல்லும் நிலைமை அதிகரித்துள்ளதால் பிள்ளைகள் கவனிப்பாரற்று சிறுவயதிலேயே தொழிலுக்கு அமர்த்தப்படுகின்றனர். இதனால் பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்” என ஹட்டன் செல்வகந்தை தோட்டத்தில் இயங்கும் உள்ளூர் அபிவிருத்திக்கான பாராளுமன்றத்தின் உறுப்பினர் சங்கரன் தெரிவிக்கிறார்.  

நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தமட்டில் குடும்பத் தலைவர்களின் மதுபாவனை, தாய்மார்கள் பிள்ளைகளைப் பிரிந்து வெளிநாடு செல்வது, அதிகரித்துள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி போன்ற காரணிகளாலேயே அதிகமாக சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுகின்றனர் என பரவலான ஆய்வில் அறியமுடிகிறது. நுவரெலியா மாவட்டத்தை ஒத்ததான காரணிகளே பதுளை மாவட்டத்திலும் சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவதில் தாக்கம் செலுத்துகின்றன.

பதுளை மாவட்டத்தில் அதிகரித்துவரும் பாடசாலை இடைவிலகல்கள்

“குடும்ப வறுமை காரணமாக எனது சகோதரர் 9ஆம் தரத்திலேயே கல்வியை இடைநிறுத்திவிட்டு தொழிலுக்குச் சென்றார். அவர் பணிப்புரிந்த இடத்தில் அவரைவிட மூத்த நபர்களுடன் ஏற்பட்ட நட்பால் ஹெரோயின் உட்பட பல்வேறு போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானார். தந்தை இல்லாத எங்கள் குடும்பத்துக்கும் எனது கல்வி நடவடிக்கைகளுக்கும் கைகொடுப்பார் என எதிர்பார்த்திருந்த எங்களை அவர் ஏமாற்றிவிட்டார். வயதுபோன என் தாயை காப்பாற்ற சாதாரண தரத்துடன் எனது கல்வியை நிறுத்திவிட்டு தோட்டத் தொழிலுக்குச் செல்கிறேன்”- என அப்புத்தளை தங்கமலை கிராமத்தில் வசிக்கும் 17 வயதுடைய சர்மிளா கவலையுடன் கூறினார்.


 தங்கமலை தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் சர்மிளா

பண்டாரவளை, பதுளை, பசறை உள்ளிட்ட நகரங்களில் பல கடைகளிலும், ஹோட்டல்களிலும் சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுள்ளனர். அதேபோன்று சர்மிளாவை போன்று பெருந்தோட்டப்பகுதிகளிலும் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் குடும்ப வறுமையால் தொழிலுக்குச் செல்வதாக இவர்களுடன் நடத்திய கலந்துரையாடல்களில் கூறுவதுடன் பெரும்பாலானவர்கள் 9,10ஆம் தரங்கள் மற்றும் சாதாரண தரத்துடன் தொழிலுக்கு அமர்த்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.  

அதிகம் தொழிலுக்கு அமர்த்தப்படும் லயன் அறைகளில் வசிக்கும் சிறுவர்கள்

பெருந்தோட்டப்பகுதியை மையப்படுத்தி ஆய்வுகளை நடத்தும் மனித அபிவிருத்தி தாபனத்தின் தரவுகளின் படி 242,000இற்கும் அதிகமான குடும்பங்கள் தோட்டப்புறங்களில் வசிக்கின்றன. இதில் 57.8 சதவீதமான மக்கள் இன்னமும் லயன் அறைகளில் வசிக்கின்றனர். “லயன் அறைகளில் வசிக்கும் குடும்பகளில் உள்ள மாணவர்கள் கல்வி கற்பதில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பாடசாலை இடைவிலகல்களும் சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவதும் லயன் குடியிருப்புகளில்தான் அதிகமாக உள்ளது” என மனித அபிவிருத்தி தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி யோகேஸ்வரி கூறுகிறார்.

 
மனித அபிவிருத்தி தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி யோகேஸ்வரி

“நாட்டில் சிங்களப் பாடசாலைகளில் இடைவிலகல் என்பது மிகவும் குறைவாகும். வெலிமடை கல்வி வலயத்தில் எந்தவொரு சிங்கள மாணவரும் பொருளாதார நெருக்கடியால் கல்வியை இடைநிறுத்திவிட்டு தொழிலுக்குச் செல்லவில்லை” – என வெலிமடை வலயக்கல்வி பணிமனையின் கள ஆய்வாளர் மெனிகே ரத்னாயக்க கூறுகிறார். பதுளை மாவட்டத்தில் முஸ்லிம் மாணவர்களின் இடைவிலகல்கள் என்பதும் மிக குறைவென வெலிமடை திட்டமிடல் கல்விப் பணிப்பாளர் ஜபார்டீன் மொஹட் முர்சீத் தெரிவித்தார். 

பதுளை மாவட்டத்தில் கள ஆய்வுகள் மற்றும் அரச, தனியார் நிறுவனங்கள், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோருடன் நடத்திய அனைத்து சந்திப்புகளிலும் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை மற்றும் பொருளாதார சுமையால் தாய், தந்தை வெளிநாடு செல்கின்றமையே சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவதில் பிரதான காரணிகளாக அடையாளம் காண முடிந்ததுடன், களுத்துறை மாவட்டத்தில் இந்தக் காரணிகளுடன் மேலும் பல பிரச்சினைகளால் சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளை எல்லையாகக் கொண்ட மாவட்டம்தான் களுத்துறை மாவட்டம். ஏனைய மாவட்டங்களை போன்று பொருளாதார நெருக்கடிகளால் சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படும் நிலைமைகள் இங்கும் அதிகமாக உள்ளது. 

 “களுத்துறை மத்துகம பகுதியில் நான் வசிக்கிறேன். தற்போது பிளாஸ்டிக் பொருட்களை  விற்பனை செய்யும் கடையில் பணிப்புரிந்து வருகிறேன். உயர்தரத்தில் விஞ்ஞானக் கல்வியை பயில்வது எனது கனவாக இருந்து. கொழும்பில் சென்றே மேலதிக கல்வியை தொடர வேண்டியுள்ளது.  நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் என்னால் விரும்பிய கல்வியை தொடர முடியாது போயுள்ளது” – என மத்துமக பகுதியில் வசிக்கும் மொஹமட் இலியாஸ் கூறுகிறார். 

மதுகமவில் பிளாஸ்டிக் கடையில் இலியாஸ்

களுத்துறை மாவட்டத்தில் களுத்துறை, தொடங்கொட, பேருவளை, பாணந்துரை ஆகிய நான்கு கல்வி வலயங்கள் உள்ளன. இங்குள்ள சிங்களப் பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தரத்தின் பின் தாம் விரும்பிய பாடங்களை கற்பதற்கான வாய்ப்புகள் மாணவர்களுக்கு உள்ளன. ஆனால், தமிழ்பேசும் மாணவர்களுக்கு கலைப்பிரிவு, வணிகப் பிரிவை தவிர ஏனைய தெரிவுகளை மேற்கொள்ளும் வாய்ப்பு மிகக் குறைவாகும். பொருளாதார ரீதியாக ஓரளவு வசதி வாய்ப்புகள் உள்ள மாணவர்களால் மாத்திரமே கொழும்பில் உயர் கல்வியை கற்க முடிகிறது. இலியாஸை போன்று ஏனைய மாணவர்கள் பொருளாதார நெருக்கடியால் ஆசைப்பட்ட கல்வியை கற்க முடியாது மன உளைச்சலுடன் தொழிலுக்குச் சென்றுவிடுகின்றனர்.

கல்விக்கான வாய்ப்புக் குறைவால் தொழிலுக்குச் செல்லும் சிறுவர்கள்

“களுத்துறை மாவட்டத்தில் சிங்கள மாணவர்களுக்கு உள்ள சந்தர்ப்பத்தை போன்று தமிழ்மொழி மூலமான பாடசாலைகளில் கணித, விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பிக்கும் முயற்சிகளை கடந்த பல வருடங்களாக மேற்கொண்டு வருகிறோம்” – என மத்துகமவை சேர்ந்த சமூக சேவையாளர் செல்வம் ஆரோக்கியம் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.  

சமூக சேவையாளர் செல்வம் ஆரோக்கியம்

களுத்துறை கொழும்புக்கு மிகவும் அண்மித்த மாவட்டம் என்பதாலும் தமிழ்மொழி மூலமான கல்விக்கு போதிய வாய்ப்புகள் இல்லாமையாலும் பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியில் அக்கறை செலுத்துவதில்லை. நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களை போன்று இங்குள்ள பெருந்தோட்டங்களில் போதியளவு தொழில்வாய்ப்புகள் இல்லாமையும் சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவது அதிகரித்துள்ளது. 

“களுத்துறை மாவட்டத்தில் சிங்கள, முஸ்லிம் பாடசாலைகளில் சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவதும் பாடசாலைகளில் இருந்து இடைவிலகி செல்வதும் மிக குறைவாகும். சிங்கள மாணவர்களுக்கு கல்வியை பெற்றுக்கொடுப்பதில் பெற்றோர் அக்கறையுடன் செயல்படுகின்றனர். ஆனால், தமிழ் பாடசாலைகளில் இந்த நிலைமை உள்ளது” – என களுத்துறை கல்வி வலயத்தின் பிரதி பணிப்பாளர் பிரேமா விஜேசந்திர கூறுகிறார். 
பிரேமா விஜேசந்திரவின் தரவுகள் சரியாக இருந்தாலும் மிகவும் நலிவடைந்த சிங்கள குடும்பங்களும் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் பிறந்தவர்தான் இங்கிரியவை சேர்ந்த சந்தருவான். 

“நான் இங்கிரியவில் உள்ள பிரபல பாடசாலையில் 8ஆம் தரம் வரைதான் கல்விகற்றேன். தந்தைதான் என்னை பார்த்துக்கொள்வார். அவர் மாதத்திற்கு ஒருமுறை நன்றாக மது அருந்துவிட்டு வீட்டுக்கு வருவார். கையில் இருக்கும் பணத்தை என் அம்மம்மாவிடம் வழங்கவிட்டு செல்வார். எனக்கு கல்வியை வழங்க எவரும் அக்கறை காட்டாததால் சிறுவயதிலேயே தொழிலுக்கு வந்துவிட்டேன்;” – என சந்தருவான் கவலையை வெளிப்படுத்தினார்.  

வீதியோர ஆடை விற்பனை கடையில் விற்பனையில் ஈடுபடும் சந்தருவான்

சந்தருவானின் கதை சோகமானதாக இருந்தாலும் களுத்துறை மாவட்டத்திற்கே முன்னுதாரணமாக திகழும் ஒரு பாடசாலையும் இங்கு உள்ளது. சிறுவர்கள் பாடசாலைக் கல்வியை கைவிட்டுவிட்டு பல்வேறு தொழில்களில் அமர்த்தப்படும் நிலைமை அதிகரித்துவரும் சூழலில் களுத்துறை பயாகல தமிழ் வித்தியாலயத்தில் எந்தவொரு மாணவரும் இடைவிலகி தொழிலுக்குச் செல்லாத வண்ணம் பெற்றோருக்கு வழிநடத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக பாயாகல தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் ஆனந்தகுமார் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  

பாயாகல தமிழ் வித்தியாலயம் நாட்டில் ஏனைய பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாக இருக்கின்ற அதேவேளை, இலங்கையில் அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடிகள், தாய், தந்தை வெளிநாடுகளுக்குச் செல்வது, அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை, பெற்றோர் பராமரிப்பின்றி பிள்ளைகள் வாழ்வதால் இடம்பெறும் சிறுவயது திருமணங்கள், பாடசாலைகளில் மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகும் வகையில் விதிக்கப்படும் கடுமையான தண்டனைகள், கல்வியின் அவசியம் தொடர்பில் சிறுவர்களுக்கு பெற்றோரும் பாடசாலை நிர்வாகங்களும் அவர்கள் உணர்ந்துகொள்ளும் விதத்தில் வழங்காமை உள்ளிட்ட முக்கிய காரணிகளின் பிரகாரம் சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படும் நிலைமை இலங்கையில் அதிகரித்து வருகிறது.

பாதையோர தட்டுக்கடையில் செல்வக்குமார்

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது நீண்டகாலமாக தீர்வுகாணப்படாதுள்ள ஒரு தேசியப் பிரச்சினையாக கருதி இந்தப் போக்கை தடுத்துநிறுத்த மாணவர்களுக்கு வழங்கும் இலவசக் கல்வியை வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைத்து கல்விச் சுமையை குறைக்க வேண்டும் என்பதுடன் பெற்றோருக்கும் சிறுவர்களுக்கும் சிறுவயதில் தொழிலுக்கு செல்வதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து உரிய விழிப்புணர்வை சிறுவர் பாதுகாப்புத் தொடர்பிலான அரச நிறுவனங்கள், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு பிரிவுகள், வலயக்கல்வி பணிமனைகள், பாடசாலை நிர்வாகங்கள் ஊடாக வழங்க வேண்டும். 
 

படமூலம் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

தொழிலுக்கு அமர்த்தப்படும் சிறுவர்களை கண்டறியும் பணியகமொன்று உருவாக்க வேண்டுமென்துடன் 1929 என்ற அரச சிறுவர் பாதுகாப்பு தொடர்பான இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை பெற்று நிலைமையை தடுத்து நிறுத்த வேண்டுமென  பல ஆசிரியர்களதும்; தொண்டு நிறுவனங்களினதும் கருத்தாக உள்ளது. சிறுவர் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக விசேட வேலைத்திட்டமொன்று இதற்கென விரைவாக உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் சிறுவர்கள் இளம் வயதில் தொழிலுக்கு அமர்த்தப்படுவதை ஓரளவேனும் தடுத்துநிறுத்த முடியுமென்பது கள ஆய்வுகளின் முடிவாகும். 

கட்டுரை – சு.நிஷாந்தன்

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.