இலங்கை தமிழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை உதவிகளாக வழங்குவது தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்து வரும் முயற்சியும் தொடர்ச்சியான சரிசனையும் தமிழ் மக்களுக்கான உலகளவு தலைமைத்துவம் குறித்து புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்க ஏற்கனவே மத்திய அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ள தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று தமிழக சட்டசபையில் இது தொடர்பான தனிநபர் பிரேரணையை முன்வைத்து அதனை நிறைவேற்றியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் உதவிக்கரம் நீட்டுவதற்கு முன்வந்துள்ள தமிழக முதலமைச்சரின் இதயசுத்தியுடனான மனப்பாங்கு மிகவும் போற்றத்தக்கதாகும்.
இலங்கை தமிழ் மக்களுக்கு 80 கோடி ரூபா பெறுமதியான 40,000 மெட்ரிக் டன் அரிசி, 137 மருந்து பொருட்கள் (28 கோடி ரூபா) மற்றும் குழந்தைகளுக்காக 500 டன் பால்மா 15 கோடி ரூபா) என்பவற்றை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.
அத்துடன் இலங்கை மக்களுக்கு உதவி செய்வதற்காக தனது சொந்த நிதியிலிருந்து 50 இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சியின் துணைத்தலைவர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதனையும் நாம் வரவேற்கிறோம்.
தமிழக அரசு நல்லெண்ண அடிப்படையில் அறிவித்துள்ள இந்த உதவிகளை இலங்கைக்கு கிடைக்கச் செய்ய இந்திய மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பழனி திகாம்பரம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.