உயர்தர விடைத்தாள்களின் மதிப்பீட்டை அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவிக்கிறது.
இதுவரை 2 பாடங்களுக்கான விடைத்தாள்களின் மதிப்பீடுகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.
ஏனைய 6 பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் 10 நிலையங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளின் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆசிரியர்களைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விடைத்தாள் மதிப்பீட்டின் போது நடைமுறைப் பரீட்சைகளுக்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான மதிப்பீடுகள் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக தாமதமானது குறிப்பிடத்தக்கது.