ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதியிடமிருந்தோ அல்லது ஜனாதிபதி செயலகத்திடமிருந்தோ எழுத்துப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை கிடைக்கவில்லையென கிழக்கு, வடமேற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் காரணமாக தமது பதவிகளை இராஜினாமா செய்வது தொடர்பில் தாம் இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை எனவும், இராஜினாமா செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களிலேயே செய்திகளை அறிந்துள்ளோம் என்றும் கூறியுள்ளனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், பதவியை இராஜினாமா செய்யுமாறு தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும், அது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும், அதனால் தான் இராஜினாமா செய்வது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
வடமேற்கு மாகாண ஆளுநர் வசந்த கர்ணாகொட, தனது பதவி விலகலை இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்காத நிலையில் தொடர்ந்தும் பதவியில் இருப்பேன் எனக் கூறியுள்ளார்.
ஊவா மாகாண ஆளுநர் திரு.ஏ.ஜே.எம்.முஸம்மில், பதவி விலகுமாறு தனக்கு அறிவிக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் பதவியில் இருக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, ஜனாதிபதி தன்னை இராஜினாமா செய்யுமாறு அறிவித்தால் மாத்திரமே பதவி விலகத் தயார் என தெரிவித்துள்ளார்.
N.S