தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம், மே மாதம் 18ஆம் திகதி தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக வௌியா தகவல் தொடர்பில் இலங்கை புலனாய்வுப் பிரிவு, இந்திய புலனாய்வு பிரிவிடம் வினவியுள்ளது.
அதற்கமைய, இது வழமையான புலனாய்வு தகவல் என இந்திய புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த தகவல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலதிக தகவல் கிடைக்கும் பட்சத்தில் அதனை அறிவிப்பதாகவும் இந்திய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்திய புலனாய்வுப் பிரிவினர் வௌியிட்டுள்ள இந்த தகவல் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு படையினருக்கு கிடைக்கும் அனைத்து தகவல்களையும் உரிய முறையில் ஆராய்ந்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்து பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, இந்த தாக்குதலை நடத்துவதற்கு திட்மிடப்பட்டுள்ளதாக கடந்த 13ஆம் திகதி த ஹிந்து செய்தி வௌியிட்டது.
நாடு கடும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் ஒன்றிணைந்துள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவு எச்சரித்துள்ளதாக த ஹிந்து செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பன்னாட்டு தொடர்புடைய புலம்பெயர் இலங்கை தமிழர்களின் சில பிரிவினர், போராட்டக்காரர்கள் மற்றும் இலங்கையின் பாதுகாப்பு படையினருக்கு இடையிலான முரண்பாடுகளின் போது தமது இருப்பை காண்பிக்க முயற்சிப்பதாகவும் இந்திய பாதுகாப்பு தரப்பினரை மேற்கோள்காட்டி கடந்த வௌ்ளிக்கிழமை த ஹிந்து செய்தி வௌியிட்டிருந்தது.