கல்வி மற்றும் சுகாதாரம் தவிர்ந்த அனைத்து துறைகளிலும் செலவினங்களை குறைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் ,அப்படி இல்லாமல் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது என்று பிரதமர் கூறுகிறார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், அடுத்த ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கத் தயாராக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் எதிர்வரும் இரண்டு வருடங்களில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கப்படும் எனவும் உட்கட்டமைப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்த வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.
அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் 40% ஐ தாண்டும் என்று குறிப்பிடும் ரணில்விக்கிரமசிங்க, ஒப்பிடுகையில் பொதுமக்களின் எதிர்ப்புகளும் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டினார்.
உணவுப் பற்றாக்குறையைத் தடுப்பதற்கு நட்பு நாடுகளின் உதவியை நாட வேண்டியுள்ளதாகவும், சீனத் தூதுவரை அடுத்த வாரம் சந்தித்து சீன அரசாங்கத்திடம் இருந்து உதவிகளைப் பெறுவது குறித்து ஆலோசிப்பதாகவும் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அரசாங்கம் டொலர் நெருக்கடியை மாத்திரமன்றி ரூபா நெருக்கடியையும் எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டிய பிரதமர், அரசாங்கத்திற்கு ரூபாவில் கூட வருமானம் கிடைப்பதில்லை எனவும் கூறுகிறார். “இதன் விளைவாக, குறைந்தபட்சம் ஒரு டிரில்லியன் ரூபாய் அச்சிடப்பட வேண்டும்,” என்று அவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.