ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தின் அடிப்படையில் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையான கொள்கைகள் மட்டுமே நாடு எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சிறந்த வழிமுறை என பிரதமர் வலியுறுத்தியுள்ளார் இன்று (26) காலை வணிக வங்கிகளின் தலைவர்களை சந்தித்த போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எதிர்காலத்தில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியேற்படுமென சுட்டிக்காட்டிய பிரதமர் , தற்போதைய உலகளாவிய நெருக்கடியில் சுமார் எழுபது நாடுகள் சிரமங்களை எதிர்கொள்கின்றன எனவும் கூறினார்.
அந்த நாடுகளில் இலங்கை முதலிடத்தில் இருப்பதாக பிரதமர் இங்கு தெரிவித்தார். சர்வதேச வட்டி விகிதங்கள் உயரும் அபாயம் அதிகம் நிலவுவதாக தெரிவித்த பிரதமர் சர்வதேச உணவுப் பொருட்களின் விலைகள் உயரும் அபாயமும் இந்த தருணத்தில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், சரியான கொள்கைகள் எடுக்கப்பட்டால் பாதிப்பைக் குறைக்க முடியும் என்று பிரதமர் விளக்கினார். சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்படும் வரை இந்தப் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வைக் காண்பது கடினம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய வாடிக்கையாளர்களின் தேவைகளின் அடிப்படையில் கடன் ஒத்திவைப்பு நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கியாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.