எமது நாட்டு விவசாயத்துறை தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
குறித்த அரச நிறுவன அதிகாரிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு (Bill and Melinda Gates foundation) உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
விவசாயத் துறையின் நவீனமயமாக்கல், போசாக்கு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் நிதிப் பாதுகாப்பு ஆகிய துறைகளை அபிவிருத்தி செய்கையில் தரவு அடிப்படையிலான முடிவுகளை எடுப்பதற்கான அணுகுமுறை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை தொடருமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
இதற்காக நிதியுதவி மற்றும் நவீன தொழில்நுட்பத்தை வழங்குவது தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த நடவடிக்கைகளில் பங்களிப்பு வழங்க முடியும் என்று ஜனாதிபதியிடம் உறுதியளித்த பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் அதிகாரிகள், அது பற்றிய விடயங்களை விரிவாக முன்வைத்தனர்.
மேலும், உத்தேச காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, ஜனாதிபதி அலுவலகத்தின் மேலதிக செயலாளர்களான வேர்னன் பெரேரா, சாந்தனி விஜேவர்தன, கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன உள்ளிட்ட அதிகாரிகள், பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு மற்றும் சர்வோதய அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
N.S