Sunday, June 23, 2024

Latest Posts

“இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவது தவிர்க்க முடியாது” தமிழக மீனவர் தலைவர்

தமிழ் நாட்டில் 60 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து அவர்கள் மீண்டும் தொழிலுக்காக  கடலுக்குள் செல்லும் நிலையில், இலங்கை மீனவர்கள் தமது வளங்களும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக் கூடும் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

வெளிநாட்டு மீனவர்கள் தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடல் வளங்களை சூறையாடுவதால், தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக வட மாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் நுழைவது தவிர்க்க இயலாது என தமிழகத்தின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் தலைவர் ஒருவர் கூறுகியுள்ளமையானது, வட மாகாண மீனவர்களை மேலும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒரு போதும் பாதிக்கும் நோக்கம் தமிழக மீனவர்களுக்கு கிடையாது எனவும், அவர்களின் பிரச்சனைகளை தாங்கள் உணர்ந்து சகோதர மனப்பான்மையுடனேயே செயல்படுவதாகவும் இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து இயந்திர மயமாக்கப்பட்ட படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா கூறுகிறார்.

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டுமென, வடக்கு மாகாண மீனவர்கள்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள நிலையில் தமிழக மீனவர்களின் கருத்து வெளியாகியுள்ளது.

வட மாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நான்கு மாவட்டங்களின் மீனவ கூட்டுறவு சமாசங்களின் தலைவர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உறுதியாகவும் இறுதியாகவும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத நுழைவு மற்றும் மீன்பிடியை தடுக்க வேண்டும்” என கூறியுள்ளனர்.

நாட்டின் கடற்படையும், கடற்தொழில் அமைச்சும் இந்தியப் படகுகளின் சட்டவிரோத மீன்பிடியை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தக்  கடித்தில் கோரப்பட்டுள்ளது.

“எதிர்வரும் 15/06/2024 ஆம் திகதி அன்று எமது இலங்கை கடற்பரப்புக்குள் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து சட்டவிரோதமாக மீன்பிடி முறையான இழுவை மடிகளை கொண்டு மீன்பிடிப்பதற்கு ஆயத்தமாகின்றனர். இவ்வாறு எல்லை தாண்டி மீன் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட தயாராகும் மீனவர்களை தடுத்து நிறுத்தி வடக்கு மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடி தொழிலை மேற்கொள்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தித் தருமாறு கோருகிறோம்”.

மேலும் அவர்கள் தமது கடிதத்தில், ஆயிரக்கணக்கான தமிழ் நாட்டு இழுவைப் படகுகள் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமை மாலை வேளைகளில் தமது கடற்பரப்பில் நுழையாமல் இருப்பதை இலங்கை கடற்படையினரும் கடற்தொழில் அமைச்சும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ் மீனவர்கள் சட்டவிரோதமாக தமது எல்லைக்குட்பட்ட கடல் பிரதேசத்தில் நுழைந்து தமது வளங்களை சூறையாடி வாழ்வாதாரத்தை சிதைப்பதாக, போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண தமிழ் மீனவர்கள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

உள்நாட்டு யுத்தம் ரத்தக்களறியுடன் கொடூரமாக முடிவடைந்து 15 வருடங்கள் ஆன பிறகும், தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி காரணமாக வடபகுதி மீனவர்களால் தமது வாழ்வாதாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

ஆனால், எந்த நேரத்திலும் எக்காலத்திலும் இலங்கையின் வட பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் எண்ணம்  தமிழ் நாடு மீனவர்களுக்கு இருந்ததில்லை என்கிறார் ஜேசுராஜா.

“இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் நுழைவது திட்டமிட்ட ஒன்றல்ல என்றாலும் அதை தவிர்க்க முடியாமல் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான கடற்பரப்பு மிகவும் குறுகியது.
கடற்காற்று காரணமாக படகுகள் அவர்கள் கடற்பரப்பிற்குள் செல்லக் கூடும். அதுமட்டுமல்ல பல சமயங்களில் திசைக்காட்டும் கருவி ஜி பி எஸ் செயலிழந்துவிடும். இப்படியான காரணங்களா தான் நாங்கள் அறியாமல் அவர்கள் கடற்பரப்பில் நுழைந்துவிடுகிறோம். வட பகுதி மீனவர்கள் மீது எமக்கு பரிவு உண்டு. அந்த சகோதர மீனவர்களுக்கு எங்கள் ஆதரவும் உண்டு. இலங்கை தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட தமிழ்நாட்டு மீனவர்கள் ஒரு காரணமாக இருக்கமாட்டோம். அந்த மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் பின்னணியில் அரசியல் இருக்கிறது”.

ஆனால், இந்த கருத்தை கேட்க தாங்கள் தயாராக இல்லை என இலங்கை தமிழ் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தமது கடற்படையும் அரச அமைப்புகளும் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் தமது கடற்பரப்பில் நுழையாமல் இருப்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அவர்கள் கோருகிறார்கள்.

”அவர்கள் எண்ணம் மிகவும் தெளிவாக உள்ளது. சட்டவிரோதமாக எமது கடற்பரப்பில் நுழைந்து எமது கடல் வளங்களை சுரண்டி தம்மை வளப்படுத்திகொண்டு எங்களை தவிக்கவிடுவது” என்கிறார் மன்னார் மாவட்ட மீனவர்கள் தலைவர்களில் ஒருவரான மொஹமட் ஆலம்.

“இது எமக்கு வாழ்வா சாவா என்கிற பிரச்சினையாகும். தமிழ் நாடு மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடியை தடுக்காதவரை எமக்கு எதிர்காலம் இல்லை” என வடக்கு மாகாண மீனவர் ஒற்றுமை அமைப்பின் தலைவர் என்.வி. சுப்பிரமணியன் தெரிவிக்கின்றார்.

அதேவேளை, பாக்குநீரணையின் இருபக்கமும் இருக்கும் மீனவர்களின் பிரச்சினைகளை அரசியல் தலையீடின்றி நேரடியாகப் பேசித் தீர்க்க முடியும் என்கிறார் ஜேசுராஜா. மேலும் தமது மீனவர்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் வலியுறுத்துகிறார்.

“மீன்களுடன் எமது படகுகள் பிடிக்கப்படுகின்றன. அந்தப் படகுகள் பெருமதியானவை. அவை கடன் மூலம் பெறப்பட்டவை. எமது படகுகளை கைப்பற்றப்பட்டாலும் நாங்கள் தவணை கட்டியே ஆக வேண்டும். இல்லையென்றால் அது பறிமுதல் செய்யப்படும் என்ற அச்சம் உள்ளது. ஆகவே படகும் இல்லை தொழிலும் இல்லை என்றால் எமது கடன்களையும் மீளச் செலுத்த முடியாது. எமது குடும்பங்களையும் காப்பாற்ற முடியாது. இவை மட்டுமின்றி கைது செய்யப்பட்ட எமது மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் நாங்கள் இலங்கை பயணிக்க வேண்டும். அதற்கும் செலவு செய்ய வேண்டும்.”

அவர்கள் தமது கடற்பரப்பிற்கும் வராவிட்டல் அவர்கள் எவ்வித பிரச்சினையையும் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்கிறார் மொஹமட் ஆலம். சர்வதேச கடற்பரப்பை தாண்டுவது என்பது சட்டவிரோதமானது என்பது தெரிந்தும், அவர்களை கைது செய்து படகுகளை கைப்பற்றும் எமது கடற்படையினர் மீது குறைகூறுகின்றனர்”.

ஜனாதிபதிக்கு கடந்த 11ஆம் திகதியே கடிதம் எழுதியிருந்தாலும், இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் நுழைவதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து வட மாகாண மீனவர்களுக்கு எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை.

வட பகுதி கடற்பரப்பில் நுழையும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத நுழைவை தடுக்க முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, நூற்றுக்கணக்கான இந்திய இழுவைமடி படகுகளை பறிமுதல் செய்வது “அரசியல் பிரச்சினைகள்”ஏற்பட அது வழிவகுக்கும் என அவர் முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.