உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்குமாயின், எதிர்வரும் ஓகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமளவில் அதன் சலுகைகளை நாட்டு மக்களுக்கு வழங்க முடியும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விற்பனை மூலம் இலாபம் ஈட்டும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலைமை குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; தற்போதைய சூழலிலும் அரசாங்கம் ஒவ்வொரு லீற்றர் டீசலுக்கும் சுமார் 100 ரூபாவையும், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு சுமார் 20 ரூபாவையும் மானியமாக மக்களுக்கு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
எரிபொருள் கொள்வனவு என்பது சாதாரண சந்தையில் பொருட்களை வாங்குவதைப் போன்றதல்ல என்றும், அது முறையான டெண்டர் நடைமுறைகளின்படி ஒப்புக் கொள்ளப்பட்ட விலையிலேயே கொள்வனவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க:
“இப்போதும் அரசாங்கம் ஒவ்வொரு லீற்றர் டீசலுக்கும் 100 ரூபா மானியத்தையும், பெற்றோலுக்கு 20 ரூபா வரையிலும் வழங்கி வருகின்றது. கடையிலிருந்து ஒரு பொருளை வாங்குவது போல எரிபொருளை உடனடியாக வாங்கிவிட முடியாது. முன்கூட்டியே டெண்டர் கோரப்பட்டு, அந்த டெண்டர்களின்படியே ஒப்புக் கொள்ளப்பட்ட விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.
எனினும், இதே நிலைமை நீடித்தால் ஓகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமளவில் மக்களுக்கு ஒரு சலுகையை வழங்க முடியும் என நாம் நம்புகிறோம். நாட்டின் பொருளாதாரத்திற்கும் அது அவசியமாகும். பொருளாதாரத்தின் மேல் மட்டத்தை நாம் கட்டியெழுப்பியிருப்பதனாலேயே இவை அனைத்தையும் செய்ய முடிந்துள்ளது. எரிபொருள் மூலம் இலாபம் ஈட்டும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை. எங்களால் முடிந்தவரை விரைவில் எரிபொருள் விலையைக் குறைக்குமாறு நாமும் கோரியுள்ளோம்” என்றார்.
