புலிகளுக்கு ஜே.வி.பியினரே ஆயுதங்களை வழங்கினர்

0
232

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஜே.வி.பியினரே ஆரம்ப காலத்தில் ஆயுதங்களை வழங்கினர் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேத்துறை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பிள்ளையான் மக்களை அச்சுறுத்துவதாக அநுர குமார திசநாயக்க தெரிவித்திருந்தார்.

அநுர குமார திசநாயக்க தரப்பினரே எங்களுக்கு முதல் முறையாக ஆயுதங்களை வழங்கினர். அதன் பின்னர் மக்களை சுடுவதற்கு எங்களிடம் ஆயுதம் கேட்டார்கள். ஆனால் நாங்கள் அதனைக் கொடுக்கவில்லை.

பிள்ளையான் மக்களை அச்சுறுத்துவதாக இருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான வாக்குகளைப் பெற்றது யார்? எனவே ஜனநாயகத்தை பற்றி பேசுவதாக இருந்தால் அநுர குமார திசாநாயக்க யோசித்து பொறுப்பான தலைவராகப் பேச வேண்டும்.

இந்த நாட்டை அழிக்க நினைக்கின்ற தலைவர் எங்கள் மண்ணில் வந்து பேசியதையிட்டு கவலையடைகின்றேன்.

அவர்கள்தான் ஒரு பிரபல்யமான ஆயுத குழு. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆயுதம் தந்தவர்களும் அவர்கள்தான். பின்னர் அதனைக் கைமாறியதும் அவர்கள்தான். எனவே அந்த ஆயுதங்களை தேடி எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அநுர குமார திசநாயக்கவுக்கு தெரிவிக்கின்றேன்” இவ்வாறு சிவநேத்துறை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அநுர குமார திசநாயக்க” மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் சுதந்திரமாகத் தமது கருத்துகளைத் தெரிவிக்கமுடியாத வகையில் பிள்ளையான் போன்றோரினால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here